உணவில் மாதவிடாய் ரத்தம், சிறுநீரை கலந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது

உணவில் மாதவிடாய் ரத்தம், சிறுநீரை கலந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது

1 mins read
646b8253-8491-498c-8672-c0fbc2f91323
பிலிப்பீன்ஸ் நாட்டவரான கெனரஸ் ரொவீனா ஓலா. படம்: திமத்தி டேவிட் -

செங்காங் வீடு ஒன்றில் உள்ளவர்களுக்கான உணவில் மாதவிடாய் ரத்தத்தையும் சிறுநீரையும் கலந்ததாக பிலிப்பீன்ஸ் நாட்டவரான கெனரஸ் ரொவீனா ஓலா எனும் 43 வயது மாது மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்த ஒரு குற்றச்சாட்டை இவர் எதிர்நோக்குகிறார். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோர இவர் முடிவெடுத்தார்.

முன்னதாக, இந்தக் குற்றத்தைத் தாம் புரிந்ததாக அதிகாரிகளிடம் ஓலா வாக்குமூலம் அளித்து இருந்ததாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் கீத் ஜீரன் திருமாறன் மாவட்ட நீதிபதி மெர்வின் பேயிடம் கூறினார்.

ஓலாவின் வேலை பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவருக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. 2018ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கண்ட குற்றத்தை இவர் புரிந்ததற்கான காரணம் பற்றியும் விவரிக்கப்படவில்லை.

மாதவிடாய் ரத்தமும் சிறுநீரும் கலக்கப்பட்ட உணவு வீட்டில் இருந்ததாகவும் அதை அவர்கள் சாப்பிட்டதாகவும் அந்த உணவில் மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக மற்றொரு சம்பவத்தில், குடிநீரிலும் சோற்றிலும் சிறுநீர், எச்சில், மாதவிடாய் ரத்தத்தைக் கலந்த இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு கடந்த ஜனவரியில் ஆறு மாத, ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் குற்றத்தை அவர் புரிந்து இருந்தார்.