சுடச் சுடச் செய்திகள்

'ஷா பிளாசா கட்டுமானத் தளத்தில் வலுவற்ற அட்டையில் கால் வைத்ததால் ஊழியர் விழுந்து மரணம்'

ஷா பிளாசாவின் முதல் மாடியில் வேலை செய்துகொண்டிருந்த கட்டுமான ஊழியரான திரு ராமகிருஷ்ணன் ரவிச்சந்திரன், கான்கிரீட் தூசுகளால் மறைக்கப்பட்டிருந்த வலுவற்ற ‘ஜிப்சம்’ அட்டையின் மீது காலை வைத்ததால், அவரது பாரம் தாங்காமல் அட்டை உடைந்து, 5 மீட்டர் தூரம் சரிந்து கீழ்த்தளத்தில் விழுந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது. அதே நாளின் பின்னேரத்தில் அவர் உயிரிழந்ததாக டான் டோக் செங் மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஜிப்சம் சங்கத்தின் இணையப் பக்கத்தில் உள்ள தகவலின்படி அந்த ஜிப்சம் அட்டை ‘உலர்சுவர்’ என்று அழைக்கப்படுகிறது. அது சுவர், கூரை, பிரிப்பான் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படக்கூடியது.

ஆனால், பாலஸ்டியர் ரோட்டில் இருக்கும் அந்த கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த கட்டுமா ஊழியர்கள் யாருக்கும் அது வலுவற்ற தள மூடி என்பது தெரியாது. அவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருந்த திரு ராமகிருஷ்ணன், கீழ்த்தளத்தில் முகம் தரையில் படும்படி விழுந்து கிடந்தார். 

மண்டையோட்டில் முறிவு உட்பட பல காயங்களால் திரு ராமகிருஷ்ணன் இறந்து போனதாக மரண விசாரணை அதிகாரி பிரேம் ராஜ் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தளங்களில் உள்ள திறவைப் பகுதிகள் வலுவான கான்கிரீட் பாளங்களால் மூடப்படுவதுடன், ஜிப்சம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை சின்னங்கள் வைக்கப்ப்ட வேண்டும் என்றும் திரு பிரேம் குறிப்பிட்டார்.

“இது ஒரு துரதிருஷ்டவசமான வேலையிட விபத்து,” என்றார் மரண விசாரணை அதிகாரி.

கட்டடங்களுக்கு மின்னியல் பொறியல் மற்றும் கேபிள் அமைக்கும் ‘எக்ஸ்பிரஸ் 21’ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் திரு ராமகிருஷ்ணன்.

அவருக்குத் திருமணமாகி ஓராண்டுக்குள்ளாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் முன்பு வெளியாகின.

திரு ராமகிருஷ்ணனின் உடல் தமிழ்நாட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரான வேலூருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16 அன்று அனுப்பப்பட்டது. அன்றே அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon