பொதுமக்களின் அக்கறைகளைக் கண்டறிய அரசு-மக்கள் இடையே இருவழித் தொடர்பு அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துகளை கேட்காமல் அரசாங்கம் முடிவு எடுக்கக் கூடாது என்றார் அவர்.
அரசாங்கத்தின் கருத்து சேகரிப்புப் பிரிவான ரீச்சின் மேற்பார்வைக் குழு உறுப்பினர்களுக்கான நியமனத்தையொட்டி நேற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது அமைச்சர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அரசாங்கம்-பொதுமக்களிடையே இருவழித் தொடர்பின் அவசியத்துக்கான இரண்டு காரணங்களை அவர் விளக்கினார்.
"ஒரு புறம் அரசாங்கம் அடையாளம் கண்டுள்ள முக்கிய விவகாரங்கள் உள்ளன. அதே சமயத்தில் எந்தெந்த விவகாரங்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பொதுமக்களிடமிருந்து கேட்டறிய வேண்டும். பொதுமக்களின் அக்கறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள இருவழித் தொடர்பு தேவை," என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது ரீச் ஆற்றிய பங்கு குறித்து அமைச்சர் ஈஸ்வரன் மேற்கோள்காட்டினார். பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறை நடப்பில் உள்ளபோதிலும் சிங்கப்பூர் மக்களின் கருத்துகளைப் பெற தொழில்நுட்பத்தை ரீச் பயன்படுத்தியதை அவர் சுட்டினார்.
மின்னிலக்க அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆய்வுகளை இணையம் வழி நடத்திய ரீச், இவ்வாண்டில் 56,000 சிங்கப்பூரர்களின் கருத்துகளைச் சேகரித்துள்ளது. இணையம் மூலம் ரீச் நடத்திய ஆய்வுகளில் கொரோனா நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
கொவிட்-19 சூழல் காரணமாக நேருக்கு நேர் நடைபெறும் கலந்துரையாடல்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், நெய்நிகர் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் பொதுமக்களின் கருத்துகள் தொடர்ந்து பெறப்படுவதை ரீச் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
"சூழ்நிலைக்கு ஏற்ப புதிய உத்திகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ரீச் கடைப்பிடித்த மெய்நிகர் கருத்தரங்கு, ஹைபிரீட் அணுகுமுறைகள் இதற்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன. இத்தகைய அணுகுமுறை கொவிட்-19 நெருக்கடிநிலையுடன் முடிந்துவிடக்கூடாது. இது புதிய, துடிப்புமிக்க தளமாக இருப்பதால் கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகும் தொடர வேண்டும்," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரீச்சின் மேற்பார்வைக் குழு மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அதில் 39 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் 27 பேர் புதிய உறுப்பினர்கள். இந்த மேற்பார்வைக் குழு 2006ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு முன் இல்லாத அளவில் இம்முறை ஆக அதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரீச்சுக்கு பிரதமர் அலுவலக, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ் தலைமை தாங்குகிறார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே, சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஸாம், கலாசார, சமூக, இளையர் மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா ஆகியோர் ரீச்சின் துணைத் தலைவர்களாக இருந்து துணை அமைச்சர் டானுக்கு உதவி புரிகின்றனர்.

