தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனது ஔவையார் விழா, திருக்குறள் விழா, பாரதியார் விழா ஆகிய மூன்று விழாக்களையும் இணைத்து, 'முக்கவி விழா'வைக் கொண்டாடவிருக்கிறது. முக்கவி விழா இம்மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இணையம் வழியே நடைபெறவுள்ளது.
அவ்விழாவையொட்டிய போட்டிகள் முன்கூட்டியே நடத்தப்படவுள்ளன. அப்போட்டிகள் பாலர் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன.
1. ஒளவையார் விழாவுக்கான போட்டிகளில் பாலர் பள்ளி வகுப்பு களில் பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள், ஆத்திசூடிச் செய்யுள்களை ஒப்பிக்கும் போட்டியும், தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள், ஆத்திசூடிச் செய்யுள்களைப் பொருளுடன் மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், "உங்களது தன்னலமற்ற சேவைக்கு எங்களது வாழ்த்துகள்!" என்ற தலைப்பில் தன்னலமற்ற சேவை செய்வோரைப் பற்றிய ஒரு பாடலைத் தெரிவு செய்து வாழ்த்துகள் கூற வேண்டும்.
தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், "பாடலும் முன்னணி ஊழியர்களும் அவர்களது சேவைகளும்" என்ற தலைப்பில் தம் கருத்துகளை இருவராக இணைந்து பேச்சுத்தமிழில் உரையாடும் போட்டி.
2. திருக்குறள் விழாவுக்கான போட்டிகள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. கீழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் "பதின்ம வயதின் ஆரம்பத்தில் நாம்" என்ற தலைப்பில் இருவர் இணையாக உரையாடும் போட்டியும், மேல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, "பதின்ம வயதும் நாமும்" என்ற தலைப்பில் இணையாக உரையாடும் போட்டியும் இடம்பெறும்.
3. பாரதியார் விழாவுக்கான போட்டிகள், புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டியாக அமைகிறது. பாலர் பள்ளி மாணவர்கள் ஐம்பது பேர் வரை போட்டியில் பங்கேற்கலாம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற வகையில் ஐம்பதுக்கு மேற்பட்டு வரும் பதிவுத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை உள்ள பிரிவினர் தலா 25 பேர் அல்லது 25 இணையினர் எனத் தங்கள் பதிவுத்தாள்களை அனுப்பிவைக்கலாம்.
இந்தப் போட்டிகள் குறித்த விரிவான விவரங்களுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கமான https://www.tamilmozhi.org/calendar_events.php என்ற பக்கத்தைப் பார்க்கலாம்.
போட்டிகளுக்கான படைப்புகள் ஏற்பாட்டாளர்களைச் சென்று சேர வேண்டிய இறுதிநாள் சனிக்கிழமை 12 டிசம்பர் 2020 இரவு 11.59மணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

