ஒன்று அல்லது இரண்டு அறைகளைக் கொண்டுள்ள வீடுகளில் தங்கும் குறைந்த ஊதிய சிங்கப்பூரர்களுக்கான இரண்டாவது கட்டமாக விநியோகம் செய்யப்படும் 150 வெள்ளி மதிப்பிலான மளிகை பொருள் பற்றுச்சீட்டுகள் அடுத்த நான்கு சனிக்கிழமைகளில் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்தப் பற்றுச்சீட்டுகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு வீட்டுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும்.
முன்னதாக அஞ்சல் பெட்டிகளில் வைக்கப்பட்ட 229 பற்றுச்சீட்டுத் தொகுப்புகள் களவாடப்பட்டதை அடுத்து இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு நேரடியாக இந்த பற்றுச்சீட்டுகள் வழங்குவது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பற்றுச்சீட்டுகள் வீடு தேடி வரும்போது அந்நேரத்தில் வீட்டில் இல்லாதவர்கள், இரண்டாவது முறையாக வீட்டிலேயே பெறத் தவறினால் அவர்கள் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பத்து நாட்களுக்குள் பெறவேண்டும்.
நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட், இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பற்றி இவ்வாண்டின் வரவு செலவு திட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

