ஜூரோங் தீவில் நேற்று ஏற்பட்ட வாகன விபத்தில் காயம் அடைந்த பேருந்துப் பயணிகளில் மூவர் மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் நேற்று அவர்கள் வசிப்பிடம் திரும்பியதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் இன்று (டிசம்பர் 7) தெரிவித்தார்.
ஜூரோங் தீவு நெடுஞ்சாலையில் ஒரு பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதில் பேருந்தில் இருந்த 21 பேரும் கார் ஓட்டுநரும் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் எண்மர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் அந்த 42 வயது ஓட்டுநர் உட்பட எஞ்சிய 11 பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்தில் இருந்த 21 ஆடவர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் என நம்பப்படுகிறது. இந்த விபத்து நேற்று காலை 7 மணிக்கு நிகழ்ந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாகவும் போலிஸ் தெரிவித்தது.
இந்த விபத்தில் ஏற்பட்ட தாக்கத்தால் அந்தப் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்து கிடந்தது. அந்த காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கிவிட்டது. இந்த விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.

