குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய குழந்தைப் பராமரிப்பாளருக்கு ஏழாண்டு சிறை

குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய குழந்தைப் பராமரிப்பாளருக்கு ஏழாண்டு சிறை

2 mins read
f5219681-7194-4eea-8a6a-49f3bc24ca50
குழந்தைப் பராமரிப்பாளரான 39 வயது சாடியா ஜமாரி $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது பராமரிப்பின்கீழ் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு நஞ்சூட்டிய குழந்தைப் பராமரிப்பாளருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்தை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் டிசம்பர் மாதத்திலும் 39 வயது சாடியா ஜமாரி புரிந்தார்.

தாம் பராமரித்து வந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு அவர் தூக்க மாத்திரை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான மருந்தை ஊட்டினார். இதிலிருந்து அந்த ஐந்து மாத குழந்தையும் 11 மாத குழந்தையும் உயிர் தப்பினர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தைக் காக்க அவர்களின் பெயர்களையும் அவர்களது தாயார்களின் பெயர்களையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த இரண்டு குழந்தைகளும் தங்களைச் சுயமாகப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் தங்களைப் பராமரிப்பவரையே அவர்கள் முழுமையாக நம்பியிருந்ததாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், சாடியாவின் செயலால் அக்குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் தாய்மாரும் குழந்தைப் பராமரிப்பாளர் தேவை என ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்திருந்தனர்.

அதையடுத்து அவர்களுடன் சாடியா தொடர்புகொண்டார். சாடியாவின் வீட்டிலிருந்து திரும்பியபோதெல்லாம் அந்த ஐந்து மாத குழந்தை அழுதுகொண்டே இருந்ததாக அதன் தாயார் தெரிவித்தார். சாடியாவின் வீட்டிலிருந்து தமது 11 மாத குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோதெல்லாம் அது மயங்கிய நிலையில் இருந்ததாக பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையின் தாயார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பதற்றத்தைக் குறைப்பதற்கான மருந்தும் தூக்க மாத்திரைகளும் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சாடியா மேல்முறையீடு செய்துள்ளார். அவர் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சிறைகுழந்தைநஞ்சு