சிங்கப்பூரில் புதிய பணிமனை பயிற்சிப் பயிலகம் ஒன்று திறக்கப்பட்டு இருக்கிறது. அதில் மின்சாரத்தில் ஓடும் வாகனங்களைப் பழுதுபார்ப்பது உள்ளிட்ட பல தேர்ச்சிகளை மோட்டார் பணிமனைத் தொழில்நுட்பர்கள் கற்றுக்கொள்வார்கள்.
சிங்கப்பூர், 2040ஆம் ஆண்டு வாக்கில் பெட்ரோல், டீசலில் இயங்கும் உள்ளெரி இயந்திரங்களைக் கொண்ட வாகனங்களை அகற்ற இருக்கிறது.
இந்த நிலையில், புதிய பயிற்சிப் பயிலகம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது. அந்த நிலையத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 தொழில்நுட்பர்களில் சுமார் 1,000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று சிங்கப்பூர் மோட்டார் வாகன பணிமனைச் சங்கம் தெரிவித்தது.
இந்தச் சங்கத்தின் புதிய பயிற்சிப் பயிலகம் பீஷானில் உள்ள சிங் மிங் ஆட்டோசிட்டியில் நேற்று திறக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் பயனீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கருத்தில்கொண்டு தொழில்நுட்பர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்று இந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிதாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் பயிலகம், மோட்டார் வாகன பணிமனைச் சேவை தொழில்துறையின் உருமாற்றத்துக்கு ஆதரவு அளிக்கும் என்று இந்தச் சங்கத்தின் தலைவர் மைக் கே குறிப்பிட்டார். இந்தப் பயிலகத்தை அமைக்க பல்வேறு அரசாங்க அமைப்புகள் உதவி இருக்கின்றன.
போக்குவரத்து, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் பயிலகத்தை நேற்று திறந்துவைத்தார்.
கரிமப் புகையை வெளியிடாத வாகனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முன்னதாகவே தொடங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்தகைய வாகனங்கள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் இது அவசியம் என்றார் அவர்.
ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்யுமாறும் வேலை நடைமுறைகளை மின்னிலக்கமயமாக்குமாறும் அமைச்சர் மோட்டார்வாகனச் சேவைத் தொழில்துறையை வலியுறுத்தினார்.
இதனிடையே, பணிமனைகளுக்கான புதிய நடைமுறை நியதிகளும் நேற்று வெளியிடப்பட்டன. அவை பயிற்சி பெறும் ஊழியர்கள் தொடர்பாகவும் சேவைகளை மேம்படுத்துவதன் தொடர்பிலும் வழிகாட்டி நெறிமுறைகளைக் கொண்டுள்ளன.
இந்த நெறிமுறைகள், இந்தச் சேவைத் துறை மேம்படுவதற்கு மிகவும் பயனுள்ள ஒன்று என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

