புத்தாக்கங்கள் மிக்க எதிர்காலத்திற்கு இன்றே வித்திடும் கிருமிப்பரவல்

புத்தாக்கங்கள் மிக்க எதிர்காலத்திற்கு இன்றே வித்திடும் கிருமிப்பரவல்

1 mins read
97bb6ae7-921e-456f-b6b8-7e9e1498eab6
-

கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பல்வேறு நிறுவனங்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாறவேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளன. ஆயினும் இதுவே புத்தாக்கங்களுக்கு வழிவிடும் என்று இக்கிருமிப்பரவலால் ஆழ் தொழில்நுட்பத்தின் தாக்கத்தைக் கலந்துரையாடும் நிபுணத்துவ குழு நேற்று (டிசம்பர் 9) தெரிவித்தது.

சிங்கப்பூர் நிதித்தொழில்நுட்ப விழா , சிங்கப்பூர் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வாரம் ஆகியவற்றின் அங்கமாக மெய்நிகர் வழியாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது பேசிய இந்தக் குழுவினர், கொவிட்-19க்குப் பிந்திய மின்னிலக்க இடைவெளி உருவாகாமல் இருக்க நிறுவனங்கள் தொடர்ந்து புத்தாக்கத்தில் ஈடுபடவேண்டும். அத்துடன், கிருமிப்பரவல் தொடர்பான இணைய பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்க ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

கொவிட்-19 க்குப் பிந்தைய உலகத்திற்கான ஆழ் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடந்தேறிய இந்தக் கலந்துரையாடலில் ஏஸ்டார் அமைப்பின் பிரெடரிக் சியூ, மைக்ரோசாஃப்டின் பொது நிர்வாகி ரினே லோ, உலக பொருளியல் கருத்தரங்கின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் தலைவர் கே ஃபர்த் பட்டர்ஃபீல்டு ஆகியோர் பங்கேற்றனர். அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தகமும் ஆழ் தொழில்நுட்ப மேம்பாட்டாளர் எஸ்ஜி இன்னோவேட்டும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு துறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றங்களை விளைவிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆழ் தொழில்நுட்பங்கள் என அழைக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு, அன்றாட பொருட்களில் இணையம் போன்றவை ஆழ் தொழில்நுட்பங்களுக்கான உதாரணங்கள்.