கல்வி தொடர்பான அரசாங்க அமைப்பு ஒன்றில் மூத்த அரசாங்க ஊழியராக பணியாற்றிய 67 வயது ஆடவர் மீதான மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.
தனக்குக் கீழ் வேலைபார்த்த 55, 43 வயதுகளுடைய பெண்களை அவர் மானபங்கம் செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகின.அவற்றை எதிர்த்து அவர் வழக்கு கோரினார் . இந்நிலையில் 55 வயது பெண்ணை அவர் மானபங்கம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எஞ்சிய ஐந்து குற்றச்சாட்டுகளும் 43 வயது பெண் தொடர்பானவை. அவற்றின் தொடர்பில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓய்வு பெற்றுவிட்ட அந்த ஆடவர் மீது மேலும் மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அக்குற்றச்சாட்டுகள் வேறொரு நாளில் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இரு பெண்களின் அடையாளத்தைக் காக்க, குற்றமிழைத்தவர், அவர் பணிபுரிந்த அரசாங்க அமைப்பு, அமைப்பில் அவரது பதவி ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இளைய பெண்ணின் போலிஸ் வாக்குமூலத்திலும் நீதிமன்றத்தில் அவர் அளித்த ஆதாரங்களிலும் முரண்பாடுகள் காணப்படுவதாக தீர்ப்பளிப்பின்போது நீதிபதி குறிப்பிட்டார். இருப்பினும், மூத்தவரின் ஆதாரங்கள் நம்பகமாக இருந்ததாக அவர் சொன்னார்.
ஆடவர் 55 வயது பெண்ணை 2016ஆம் ஆண்டில் குறிவைத்ததாகவும் அவரை இறுக்கமாகக் கட்டிப் பிடித்ததாகவும் கூறப்பட்டது.தம் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி பாதிக்கப்பட்ட மாது, ஆடவரின் செயல் குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
பாலியல் தொல்லையற்ற ஒரு பாதுகாப்பான சூழல் வேலையிடத்தில் இருக்க வேண்டும். ஆனால் ஒருவரின் மேலதிகாரியே இவ்வாறு நடந்துகொள்ளும்போது பாதிக்கப்படுபவர்கள் மௌனமாக இருக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன் சம்பவத்தை அடுத்து மாது உணர்வுரீதியாக பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு வரிசையாக பல மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
$15,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆடவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும்.

