வெளிநாட்டு ஊழியர்கள் 7 பேருக்கு குறைவான ஊதியம் அளித்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிறுவனம்

வெளிநாட்டு ஊழியர்கள் 7 பேருக்கு குறைவான ஊதியம் அளித்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிறுவனம்

2 mins read
f6e0dfb8-f74c-44e5-9250-47dc07a68355
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

வெளிநாட்டு ஊழியர்கள் 7 பேருக்கு சுமார் ஈராண்டுகளாக குறைவான ஊதியம் வழங்கி வந்ததை உள்ளூர் நிறுவனமான 'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

2017, 2018 ஆண்டுகளில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்ததன் தொடர்பிலான 15 குற்றச்சாட்டுகளை இன்று (டிசம்பர் 10) அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. வெளிநாட்டு ஊழியரணி வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் இது குற்றமாகும்.

அடுத்த மாதம் 7ஆம் தேதி தீர்ப்பளிக்கும்போது, இத்தகைய மேலும் 14 குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வானொலி படைப்பாளர் டேனியல் ஓங், முன்னாள் மாடல் ஜேமி டியோ ஆகிய இருவரும் 2011ஆம் ஆண்டில் தொடங்கிய 'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனத்தை கோல்கத்தாவைத் தளமாகக் கொண்ட துன்செரி குழுமம் 2016ஆம் ஆண்டில் $2.5 மில்லியன் விலைக்கு வாங்கியது.

ஊதியம் குறைவாகக் கொடுக்கப்பட்ட ஏழு பேரும் எஸ்-பாஸ் அனுமதி அட்டையில் இருந்தவர்கள். அவர்களுக்கு $2,200 முதல் $2,600 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு $1,400 முதல் $2,050 வரை மட்டுமே நிறுவனத்தால் ஊதியமாக வழங்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் வரை அங்கு வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய ஆறு ஊழியர்களுக்கு குறைவான ஊதியத்தை அந்த நிறுவனம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த அறுவரில் ஒருவருக்கு 2018ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது.

கேக் தயாரிக்கும் சமையல் நிபுணர் ஒருவருக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை குறைவான ஊதியத்தை அந்த நிறுவனம் வழங்கியது

குறைவான ஊதியத்தை அந்த நிறுவனம் முதலில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தது.

ஆனால், 2018ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை ஊழியர்களின் கணக்கில் செலுத்திவிட்டு, பின்னர், அதில் ஒரு பகுதியை நிறுவனத்திடம் ரொக்கமாக திருப்பிச் செலுத்த வேண்டும் என நிறுவனம் ஊழியர்களை அறிவுறுத்தியது.

அந்த நிறுவனத்துக்கு $127,000 அபராதம் விதிக்கும்படி மனிதவள அமைச்சின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மேக்சிமிலன் சியூ கேட்டுக்கொண்டார்.

கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நிறுவனம் தொடர்ந்து குறைவான ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்கியிருக்கும் என்றார் திரு சியூ.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஊதியத்தை முழுவதுமாக, சரியான நேரத்தில் வழங்குவதுடன் ஊழியர்களின் நலவாழ்வையும் பார்த்துக்கொள்வது நிறுவனங்களின் பொறுப்பு.

வழக்கு தொடங்குவதற்கு முன்பே ஊழியர்களுக்குச் சேர வேண்டிய மொத்த ஊதியமும் அவர்களுக்கு நிறுவனம் வழங்கிவிட்டதாக, நிறுவனத்தின் சார்பில் வாதிட்ட தற்காப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நிறுவனத்துக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வெளிநாட்டு ஊழியர்