புக்கிட் பாத்தோக்கில் அமையவிருக்கும் முதியோருக்கான சிங்கப்பூரின் முதலாவது 'பிடிஓ' எனும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
அந்த வீடுகளில் முதியவர்கள் சொந்தமாக வசித்தாலும் தங்களுக்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு, ஆதரவு, சமூக ஒன்றுகூடல் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் புதிய வீடுகள் முதியவர்கள் தங்கள் முதுமைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் வழியில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், சுகாதார அமைச்சு ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
24 மணிநேர அவசரகால கண்காணிப்பு, பதில் நடவடிக்கை சேவை, அடிப்படை சுகாதாரப் பரிசோதனைகள், எளிமையான வீட்டு உபகரணங்களைப் பொருத்துதல், அந்த வளாகத்துக்குள் சமூக ஒன்றுகூடலுக்கு ஏதுவாக நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவை அந்த ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.
அந்த வீடுகளில் வசிப்பவர்கள் அடிப்படை சேவை தொகுப்புக்கு சந்தா செலுத்த வேண்டும். அது 15 ஆண்டுகளுக்கு $22,000 என்று இருக்கும்.
வீட்டைச் சுத்தம் செய்தல், சலவை சேவை, உணவு விநியோகம், பகிர்ந்தளிக்கப்படும் பராமரிப்பு சேவை ஆகியவற்றைப் பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் அமையவிருக்கும் இந்த முதலாவது தொகுப்பு சமூக பாராமரிப்பு அடுக்குமாடி புளோக்கில் 160 வீடுகள் இருக்கும். அவை 2024ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.
இந்த வீடுகள் விற்பனை இவ்வாண்டு மே மாதம் இடம்பெறவிருந்தது. ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக அது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டின் பரப்பளவு 32 சதுர மீட்டர். அதில் மூத்தோருக்கு உதவக்கூடிய கைப்பிடிகள், சக்கர நாற்காலியில் பயன்படுத்தக்கூடிய, வழுக்காத தரைக்கற்கள் கொண்ட குளியலறைகள் இருக்கும்.
மறைவுகள் இல்லாமல் அமைக்கப்படும் இவ்வீடுகளில், வரவேற்பறையையும் படுக்கையறையையும் பிரிப்பதற்காக சறுக்கு சுவரும் சுவருக்குள் அமைக்கப்படும் அலமாரி, பொருட்கள் வைக்கும் இடங்கள், புதுப்பிப்பு நேரத்தைக் குறைக்க வசதிகள் கொண்ட சமையலறை ஆகியவற்றை இந்த வீடுகளில் காணலாம்.
ஒவ்வொரு மாடியிலும் வசிப்போர் ஒன்றுகூடி பேசுவதற்கும் உணவைப் பகிர்ந்துகொள்வதற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சமூக ஒன்றுகூடல் இடம் அமைக்கப்படும் என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்தன.
அங்கு முதியவர்களுக்கான சமூக நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய சமூக மேலாளர் ஒருவர் பணியில் அமர்த்தப்படுவார். அவர், முதியவர்களின் தேவைக்கேற்ப பராமரிப்பு சேவைகளுடன் அவர்களை இணைத்து விடுவார்.
தேவை ஏற்படுமாயின் அங்கு வசிப்பவர்கள் புக்கிட் பாத்தோக் பராமரிப்பு இல்லத்துக்கு மாறிக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நடைபாதை, நடவடிக்கை நிலையம், உணவங்காடி நிலையம், சமூக தோட்டம், உடலுறுதி நிலையம், ஒய்வெடுக்கும் கூடாரம் ஆகியவையும் குடியிருப்பு வளாகத்தில் அமைந்திருக்கும்.
இந்த வீடுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

