குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் விலைபோன வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் கூடுதலாக 13 வீவக வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன.
இதையடுத்து, இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் அப்படி ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் மேலான விலைக்கு 72 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு முழுவதும் 64 வீடுகள் இந்த விலைக்கு விற்கப்பட்டன.
சென்ற மாதம் மறுவிற்பனையான வீவக வீடுகளின் எண்ணிக்கை சரிந்தபோதும், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் ஏறுமுகத்தில் இருந்ததை 'எஸ்ஆர்எக்ஸ்' அமைப்பின் முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆக அதிகமாக 'தி பின்னகல் அட் டக்ஸ்டன்' குடியிருப்பில் உள்ள ஓர் ஐந்தறை வீடு $1,248,000 விலைக்கு விற்கப்பட்டது.
முதிர்ச்சியடையாத பேட்டைகளைப் பொறுத்தமட்டில், ஹவ்காங்கின் 'பார்க்லேண்ட் ரெசிடன்சஸ்' குடியிருப்புகளில் உள்ள, வடிவமைத்து, கட்டி, விற்கப்படும் திட்டத்தின்கீழ் (டிபிஎஸ்எஸ்) கட்டப்பட்ட ஒர் ஐந்தறை வீடு 810,000 வெள்ளிக்கு விலைபோனது.
ஒட்டுமொத்த வீவக மறுவிற்பனைச் சந்தையைப் பார்க்கும்போது, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நவம்பரில் விலைகள் 1% கூடின. அதே காலகட்டத்தில், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் இந்த விலையேற்றம் 1.3 விழுக்காடாக இருந்தது.
அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் நவம்பரில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை 4.3% குறைவாக இருந்தது. அதாவது, சென்ற மாதத்தில் 2,331 வீவக வீடுகள் மறுவிற்பனை மூலம் கைமாறின. இருப்பினும், 2019 நவம்பரைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 21.7% அதிகம்.
கடந்த மாதம் விலைபோன வீவக மறுவிற்பனை வீடுகளில் 41.9% நாலறை வீடுகள், 26.6% ஐந்தறை வீடுகள், 22.1% மூவறை வீடுகள், 8.2% எக்சகியூட்டிவ் வீடுகள் என்றும் எஞ்சியவை, பல தலைமுறை, ஓரறை, ஈரறை வீடுகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வீவக மறுவிற்பனைச் சந்தை ஏறுமுகத்தில் இருப்பதால் வீடுகளை விற்க விரும்புவோர் அதிக விலை கேட்டிருக்கலாம் என்றும் மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு அதுவொரு காரணமாக இருக்கலாம் என்றும் 'ஆரஞ்ச் டீ அண்ட் டை' ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.
மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகமாக பல வீடுகள் விலைபோனதாக திருவாட்டி சன் குறிப்பிட்டார்.

