லேக்சைட் வீட்டில் முதிய தம்பதி மரணம்; காப்பாற்றச் சென்ற மகனும் உயிரிழந்தார்

லேக்சைட் வீட்டில் முதிய தம்பதி மரணம்; காப்பாற்றச் சென்ற மகனும் உயிரிழந்தார்

2 mins read
8b6665c1-b275-492d-b8a9-a725361cc2cf
சிங்கப்பூரின் லேக்சைட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தில் 80 வயது முதியவர், அவரது 66 வயது மனைவி, 45 வயது மகன் ஆகியோர் நேற்று (டிசம்பர் 10) உயிரிழந்தனர். படம்: வான் பாவ் -

சிங்கப்பூரின் லேக்சைட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தில் 80 வயது முதியவர், அவரது 66 வயது மனைவி, 45 வயது மகன் ஆகியோர் நேற்று (டிசம்பர் 10) உயிரிழந்தனர்.

இந்த மரணங்களில் சந்தேகப்படும்படியாக ஏதும் இல்லை என்று குறிப்பிட்ட போலிஸ், நேற்று மாலை 4.15 மணியளவில் ஹோ சிங் ரோட்டில் உள்ள புளோக் 120ல் அமைந்திருக்கும் அந்தத் தம்பதியின் வீட்டில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு போலிசார் சென்றபோது அசைவின்றிக் கிடந்தத தம்பதியர் உயிரிழந்ததை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

தம்பதியரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டுக்குச் சென்ற அவர்களது மகன் துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது சுயநினைவின்றி இருந்தார். இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

மரணங்கள் பற்றி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

வயதான திரு ஒமர் மனன் குளியலறையில் விழுந்து கிடந்ததாகக் கூறப்பட்டது. அவருக்கு உதவச் சென்ற அவரது மனைவி அஸ்மா புஜாங்கும் அந்த முதியவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உட்பட்டனர்.

அவர்களைப் பார்ப்பதற்காக தம்பதியின் மகனான திரு முகமது ஆஷிக்கின் ஒமர் தமது 15 வயது மகளுடன் சென்றதாக அவரது நண்பர் ஒருவர் சீன நாளிதழிடம் தெரிவித்தார்.

வெகுநேரம் வாசலில் காத்திருந்த முகமது ஆ‌ஷிக்கின், பின்னர் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். பெற்றோர் கீழே விழுந்திருந்ததைக் கண்டு அவர்களுக்கு உதவச் சென்றபோது அவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தனியாக வசித்து வந்த அந்தத் தம்பதியை அவர்களது மகனும் மருமகளும் பெரும்பாலும் தினமும் சென்று பார்த்ததாக அக்கம்பக்கத்தார் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்