புலனாய்வுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றாலும் சட்டம் படித்து வழக்கறிஞராகும் ராஜூ ரவீந்திரன்

புலனாய்வுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றாலும் சட்டம் படித்து வழக்கறிஞராகும் ராஜூ ரவீந்திரன்

2 mins read
13c561da-02ec-40b1-8dd8-0e7c69491a30
திரு ராஜூ ரவீந்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விரும்பியதைச் சாதிக்க வயது தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் 59 வயதான திரு ராஜூ ரவீந்திரன்.

29 ஆண்டுகள் போலிஸ் புலனாய்வுத் துறையில் அதிகாரியாக இருந்த திரு ராஜூ, நாளை முதல் சட்ட நிறுவனம் ஒன்றில் பயிற்சி வழக்கறிஞராகச் சேர இருக்கிறார்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (SUSS) ஜூரிஸ் டாக்டர் (JD) சட்டத் திட்டத்தில் பயின்று கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கறிஞர் பட்டம் பெற்ற 11 பேரில் திரு ராஜூவும் ஒருவர்.

சிங்கப்பூரில் குற்றவியல் மற்றும் குடும்பச் சட்ட வழக்கறிஞர்களின் தேவை அதிகம் இருப்பதாக 2016ஆம் ஆண்டு கூறப்பட்டதையடுத்து, SUSS பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது இந்த சட்டக் கல்வி.

தம் வகுப்பில் ஆக மூத்தவராக இருந்தார் திரு ராஜூ. அந்த வகுப்பில் இருந்தவர்களின் சராசரி வயது 40. குடும்பம், வேலை என பல்வேறு விஷயங்களில் தமது பங்களிப்பைத் திறம்பட வழங்கியதுடன் கல்வியிலும் கவனம் செலுத்தி, இரண்டாம் வகுப்பு ஹானர்ஸ் உடன் பட்டம் பெற்றுள்ளார் திரு ராஜூ.

போலிஸ் புலனாய்வுத் துறையில் பணியாற்றியபோது பல சுவையான வழக்குகளின் தீர்வுகளைக் காண தாம் ஈடுபடுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கின் தொடர்பில் பலதரப்பட்ட மக்களுடன் பணிபுரிந்ததைச் சுட்டிக்காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர், தண்டனைக்காலத்துக்குப் பிறகு நல்ல முறையில் மாற்றம் பெறுவதே தமக்கு மிகுந்த திருப்தியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகையோருக்காகத் தமது நேரத்தை ஒதுக்கி ஆலோசனைகள் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் போலிஸ் புலனாய்வுத் துறையில் உதவி கண்காணிப்பாளருக்கு இணையான பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் அவர்.

2002ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்வியை பகுதிநேரமாகப் படித்து முடித்த அவர், ஜூரிஸ் டாக்டர் சட்டக் கல்வி பற்றி அறிந்ததும் உடனே விண்ணப்பித்தார்.

29 வயது மகள், 34 வயது மகன் ஆகியோருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்குள் திருமணம் நடந்ததைக் குறிப்பிட்டதுடன், ஒரு தந்தையாக தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் வேலைப்பளு, படிப்பு இவற்றுக்கிடையே செய்து முடித்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார் திரு ராஜூ.

பல காலமாக வழக்கறிஞராக வேண்டுமென்ற தமது விருப்பம் நிறைவேறி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ராஜூ, குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் கொண்ட பீட்டர் ஓங் லா கார்பொரேஷனில் நாளை முதல் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றவுள்ளார்.

கடப்பாடு, ஒழுக்கம், தியாகம் செய்யும் மனப்பான்மை போன்றவை இருந்தால் விரும்பியதைச் செய்து முடிக்க முடியும் என்கிறார் திரு ராஜூ.

குறிப்புச் சொற்கள்