நன்னெறித் தங்கம் நிகழ்ச்சி

நன்னெறித் தங்கம் நிகழ்ச்சி

2 mins read
b25aae08-c755-404c-b926-cee66ca53d30
'நன்னெறித் தங்கம் பாட்டு' நிகழ்ச்சியில் திருமதி சௌந்தரநாயகி வயிரவன் பாடுகிறார். மிருதங்கத்தில் திரு எஸ் தேவராஜன். படம்: முனைவர் பா. ராமநாதன் -

சிங்­கப்­பூ­ரின் தமிழ் முன்னோடி இலக்­கி­யங்களில் ஒன்றாகக் கருதப் ­படும் 'நன்­னெ­றித் தங்­கம் பாட்டு' இயல், இசை, நாட்­டிய வடி­வில் இம்­மா­தம் 6ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மக்­க­ளி­டையே கொண்டு சேர்க்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் தமி­ழி­சையை வளர்க்­கும் நோக்­கில் ஆரம்­பிக்­கப்­பட்ட கலா­மஞ்­சரி நிறு­வ­னம், தமிழ்­மொழி விழா 2020ன் ஓர் அங்­க­மாக இந்­நி­கழ்ச்­சி­யைப் படைத்­தது.

இந்த மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­துக்­கொண்ட கலா­சார, சமூக இளை­யர்­துறை மற்­றும் வர்த்­தக தொழில்­துறை துணை அமைச்­சர் திரு. ஆல்­வின் டான், "பல இனக் கலா­சா­ரம் சிங்­கப்­பூ­ரின் சிறப்பு. நம் முன்­னோர்­கள் நமக்கு கொடுத்­தி­ருக்­கும் கலா­சா­ரம், பழக்க வழக்­கங்­கள் நம்மை பல இனத்­த­வ­ரு­டன் ஒன்று கூடி வாழ்வதற்கு வழி வகுத்­தி­ருக்­கிறது. அதுவே சிங்­கப்­பூ­ரின் தனிச்சிறப்பு," என்றார்.

சிறப்­புப் பேச்­சா­ள­ரா­கக் கலந்­து ­கொண்ட மூத்த தமி­ழ­றி­ஞர் முனை­வர் சுப. திண்­ணப்­பன், நன்­னெறி என்­பது நல்­லொ­ழுக்­கத்தை எடுத்­து­ரைப்­பது, தங்­கம் என்­றால் ஒரு பெண்­ணைப் பார்த்­துக் கூறு­வது போல் அமைந்­துள்­ளது என்று நன்­னெ­றித் தங்­கம் பாட்டு என்ற தலைப்­பிற்­கான விளக்­கத்­தைக் கூறி­னார்.

ஏறத்­தாழ நூற்றி நாற்­பது கவி­தை­க­ளைக் கொண்ட இப்­புத்­த­கம் 1868ஆம் ஆண்டு திரு.நாரா­ய­ண­சாமி நாயக்­கர் என்­ப­வ­ரால் எழு­தப்­பட்­டது. அக்­கா­லத்­தில் வாழ்ந்த மக்­கள் சுய­முன்­னேற்­றத்­தைக் கருத்­தில் கொள்­ளாது தீய பழக்க வழக்­கங்­களை மேற்­கொண்டு அற­நெறி தவறி வாழ்ந்து வந்­த­னர்.

அவர்­க­ளின் இந்­நி­லை­யைக் கண்டு வருந்தி 3 வரி­களில் கல்வி, பெற்­றோ­ரைப் பேணு­தல், புறங் ­கூறாமை, ஆசானை மதித்­தல், ஊக்­கம் உடைமை, பொய் சொல்­லாமை, நன்றி மற­வாமை என பல்­வேறு நல்­லொ­ழுக்­கங்­க­ளைப் பற்றி கவி­ஞர் இப்­புத்­த­கத்­தில் எழு­தி­யி­ருக்­கி­றார். இவற்­றிற்­கான விளக்­கங்­களை முனை­வர் சுப. தின்­னப்­பன் எழுதி­யுள்­ளார்.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 23 கவி­தை­க­ளுக்கு, முனை­வர் கே. சிவ­ராஜ் இசை­ய­மைக்க கலா­மஞ்­ச­ரி­யின் நிறு­வ­னர் திரு­மதி சௌந்­த­ர­நா­யகி வயி­ர­வ­னு­டன் திரு­மதி தேனம்மை பழ­நி­யப்­பன் இப்­பா­டல்­ க­ளைப் பாடி­யி­ருக்­கி­றார்.

திரு எஸ் தேவ­ரா­ஜன் மிரு­தங்­கம் இசைக்க, திரு வே சிவ­கு­மார் வய­லின் வாசிக்க திரு விஜ­ய­சங்­க­ரா­மு­வின் காணொ­ளி­யில் 'நன்­னெறித் தங்­கம்' என்ற தலைப்­பில் இப்­பா­டல்­கள், நிகழ்ச்­சி­யில் ஒலி­வட்­டா­க­வும் வெளி­யி­டப்­பட்­டது.

'ஸூம்' வழி நேரடிப்படைப்பில் திருமதி. பிரியா சிறப்பாக நிகழ்ச்சியை வழி நடத்த 23 கவி­தை­க­ளை­யும் திரு ஜெரி கோ என்ற சீன இளை­ஞர் உட்­பட பள்ளி மாண­வர்­கள், பெண்­கள் என பல்­வேறு தரப்­பி­னர் அதன் தமிழ் மற்­றும் ஆங்­கில மொழி ­பெயர்ப்­பு­டன் வாசித்­த­னர்.

இந்த ஆங்­கில மொழி­பெ­யர்ப்பை திரு­மதி வள்­ளிக்­கண்ணு செய்­து இருந்தார். திருமதி சரஸ்வதி ஐயர் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவை நாடியது.