இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு சுருங்கியதில் பாதிக்கப்பட்ட பத்தில் ஒன்பது பேர் வெளிநாட்டினர் என்று மனிதவள அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் வேலை நியமன விகிதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று அமைச்சு கூறியது.
இந்த வேலை நியமனப் புள்ளிவிவரங்களில் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் சேர்க்கப்படவில்லை.
இவ்வாண்டின் முன்றாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் வேலைச் சந்தை படிப்படியாக மேம்பட்டு வருவதை அமைச்சு சுட்டியது. பணிப்பெண்களைக் கணக்கில் எடுக்காமல் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை பணியில் இருப்போரின் எண்ணிக்கை 158,700 குறைந்தது.
இவர்களில் 139,100 பேர் வெளிநாட்டினர். வேலை இழந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து 19,600ஆகப் பதிவானது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் வேலை நியமன விகிதம் அதிகரித்ததை அடுத்து அதற்கு முன் வேலை இழந்த பெரும்பாலானோருக்கு வேலை கிடைத்துவிட்டதாக அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கான வேலை நியமன விகிதம் கடந்த செப்டம்பர் மாதம் 43,200லிருந்து 2.34 மில்லியனாக உயர்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவான விகிதத்தைவிட 0.4 விழுக்காடு குறைவு.
"வேலைச் சந்தை சீரானதற்கு உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைக்க எடுக்கப்பட்ட வலுவான ஆதரவு நடவடிக்கை பெரும் பங்காற்றியது.
"வேலை ஆதரவுத் திட்டம், தேசிய சம்பள மன்றம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவை இதில் அடங்கும். அனைத்து துறைகளிலும் சிங்கப்பூரர்கள் முக்கிய பங்காற்றுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்தது," என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
பணிப்பெண்களைக் கணக்கில் எடுக்காமல் மற்ற வெளிநாட்டு ஊழியர்களின் வேலை நியமன விகிதம் கடந்த மூன்றாம் காலாண்டில் தொடர்ந்து சரிவைக் கண்டது. இவ்வாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளைவிட இது 72,300 குறைவு.
கட்டுமானம், உற்பத்தி, போக்கு வரத்து, நிர்வாகம் போன்ற துறைகளில் வெளிநாட்டவர்களின் வேலை நியமன விகிதம் அதிகம் குறைந்துள்ளது.
ஆனால், கலைகள், பொழுதுபோக்கு போன்ற துறைகளில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் வேலை நியமன விகிதம் குறைந்துள்ளது.
மாறாக, பொது நிர்வாகம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகச் சேவைகள், தகவல் மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் வேலை நியமன விகிதம் ஏற்றம் கண்டுள்ளளது.
உணவு மற்றும் பானத் துறையிலும் கூடுதல் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

