திரு கோவுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை; 4 வார கதிரியக்க சிகிச்சைக்கும் செல்ல இருக்கிறார்

திரு கோவுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை; 4 வார கதிரியக்க சிகிச்சைக்கும் செல்ல இருக்கிறார்

2 mins read
4db216f8-2ba2-480b-afaa-e764ee8479f2
குரல்வளையிலிருந்த சந்தேகத்திற்குரிய கட்டியில் புற்றுநோய் உயிரணுக்கள் இருந்ததாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் பகிர்ந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், தமது குரல்வளையிலிருந்த கட்டி ஒன்றை அகற்றியதை அடுத்து நான்கு வாரங்களுக்குக் கதிரியக்க சிகிச்சைக்குச் செல்ல இருக்கிறார். புற்றுநோய் உயிரணுக்கள் அனைத்தும் செயலிழந்து போவதை இது உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.

தமது மிக அண்மைய ஃபேஸ்புக் பதிவில் 79 வயது திரு கோ, "தற்போது உள்ள வானிலையைப் போலவே, மருத்துவ ரீதியாக எனக்கு அடைமழையாகப் பொழிகிறது," என்றார்.

மேலும், "விழாக் காலத்தை இப்படியா கொண்டாட வேண்டும்," என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

குரல்வளையிலிருந்த சந்தேகத்திற்குரிய கட்டியில் புற்றுநோய் உயிரணுக்கள் இருந்ததாக திரு கோ பகிர்ந்துகொண்டார்.

தமது கழுத்து, நெஞ்சுப் பகுதிகளில் அந்த உயிரணுக்கள் இல்லை என்று பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியபோதும் அனைத்து புற்றுநோய் உயிரணுக்களையும் ஒட்டுமொத்தமாக ஒழித்திட கதிரியக்க சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறப்பட்டது.

"அனைவரும் அடிக்கடி அல்லது ஆண்டுக்கு ஒரு முறை சுகாதாரப் பரிசோதனைகளுக்குச் செல்வதை ஊக்குவிக்க, மருத்துவ ரீதியாக எனக்கு ஏற்படும் அனுபவங்களைப் பற்றி நான் பகிர்ந்து வருகிறேன்," என்றார் அவர்.

குரலில் மாற்றம், தொண்டையில் கட்டி இருப்பதை அறிந்தால் உடனே மருத்துவ உதவி நாடுமாறு திரு கோ அறிவுறுத்தினார். 'ஸ்கிரீன் ஃபார் லைஃப்' போன்ற சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தைக் குறைந்த கட்டணத்தில் சுகாதார அமைச்சு வழங்குகிறது.

"அறியாமை, தாமதம், மறுப்பு ஆகியவற்றால் செலவுகள் அதிகரிக்கலாம். தொடக்கக் காலத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறவும். அவ்வாறு கண்டறிந்து, சிகிச்சை பெற்றதால் 90 விழுக்காட்டினருக்கு மேல் ஐந்து ஆண்டுகளுக்காவது உயிர்வாழ்ந்துள்ளனர். புற்றுநோய் பரவிய பின்னர் உயிர்வாழும் விகிதம் 30 விழுக்காட்டுக்குக் கீழ் சென்றுவிடும்," என்று பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நவம்பர் மாதத்தில் சிறுநீரகத்தில் இருந்த பெரிய கல்லை அகற்றிய அறுவை சிகிச்சையைப் பற்றி திரு கோ பல ஃபேஸ்புக் பதிவுகளில் பகிர்ந்திருந்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் ஆஸ்துமா தாக்கி இரு தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டதைப் பற்றியும் கூறியிருந்தார்.

"இடியுடன் கூடிய இந்த மழைக்காலம் என்னைக் கடந்து போகும். சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக தெளிவான, நீல வானத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன். இனி வரும் ஆண்டுகளும் நல்லதாகவே அமையட்டும்," என்றார் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு கோ.

குறிப்புச் சொற்கள்