குறைந்த வருமானக் குடும்பத்தினரின் போக்குவரத்துச் செலவுக்கு உதவும் வகையில் இதுவரை 300,000க்கும் மேற்பட்ட பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் கூட்டாகத் தெரிவித்து உள்ளன.
வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $15 மில்லியனுக்கும் மேல் என்றும் அவை கூறியுள்ளன.
பயணக் கட்டண அட்டையில் தொகை நிரப்பவும் மாதந்திர சலுகைக் கட்டண அட்டையை வாங்கவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு பற்றுச்சீட்டும் 50 வெள்ளி மதிப்புள்ளவை.
பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. அதன் விரிவாக்கமாக இவ்வாண்டும் அந்த நடவடிக்கை தொடருவதாக கூட்டறிக்கை குறிப்பிட்டது.
மொத்தம் ஒதுக்கப்பட்டு உள்ள 450,000 பற்றுச்சீட்டுகளில் மூன்றில் இரு பங்கு வழங்கப்பட்டுவிட்டது. இவற்றில் 30,000 பற்றுச்சீட்டுகள் குறைந்த வருமானக் குடும்பத்தினருக்கு இம்மாத நடுப்பகுதியில் தொடங்கிய முதற்கட்ட பற்றுச்சீட்டு விநியோக நடவடிக்கையின்கீழ் வழங்கப்பட்டன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் காம்கேர் குறைந்த, நீண்டகால உதவித்திட்டங்களின்கீழ் இவை வழங்கப்பட்டன.
இவர்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற தாமாகத் தகுதிபெற்றுவிடுவார்கள் என்பதால் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தினரே பொருளியல் ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்ட னர் என்பதால் அவர்களுக்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் உதவியாக இருக் கும் என கருதப்படுகிறது.
ஏற்கெனவே பற்றுச்சீட்டுகள் கிடைக்கப்பெற்றவர்கள் தவிர, தகுதி பெறும் குடும்பத்தினர் பற்றுச்சீட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும் எல்லா பொதுப் போக்குவரத்துப் பற்றுசீட்டுகளும் அடுத்த ஆண்டு ஜூன் 30க்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
குடும்பத்தில் உள்ளோரின் எல்லா வகையான வருவாயையும் கணக்கிட்ட பின்னர் வரக்கூடிய மாதாந்திர தனிநபர் வருமானம் $1,200க்குக் கீழ் இருப்பின் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறலாம்.
வேலை மற்றும் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் வருவாய், முதலீடு, வாடகை போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய், ஓய்வூதியத் தொகை, குடும்பத்தைச் சேராதோரிடமிருந்து கிடைக்கப்பெறும் ரொக்க பங்களிப்புகள் - போன்ற அனைத் தும் கூட்டப்பட்டு மாதாந்திர தனிநபர் வருமானம் கணக்கிடப்பட வேண்டும்.
ஊழியரணி வருவாய் உதவித்தொகை போன்ற வழக்கமாக அரசாங்கம் வழங்கும் தொகையும் இந்தக் கணக்கில் சேரும்.
இதுவரை இந்தப் பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்காத, தகுதி பெறும் குடும்பத்தினர் தங்களது வட்டாரத்தில் உள்ள சமூக நிலையங்கள், சமூக மன்றங்கள் போன்றவற்றை விண்ணப்ப உதவிக்கு நாடலாம். ஜனவரி 31க்குள் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என இவ்விரு அமைப்புகளும் நினைவூட்டி உள்ளன.
இரண்டாம் கட்ட பற்றுச்சீட்டு விநியோகம் அடுத்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில் இருந்து கட்டம் கட்டமாகத் தொடங்கும்.
முதற்கட்ட விநியோகத்தில் இடம்பெறாத அனைவருக்கும் அப்போது பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவ $50 பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டு

