சட்டவிரோத, தொலைதூர சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து $296,000 ரொக்கப் பணமும் சூதாட்டம் தொடர்பான சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் போலிஸ் படை அதன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கைது செயப்பட்ட ஆடவர்களில் ஒருவரின் வயது 39, மற்றவருக்கு 51 வயது. சட்டவிரோத தொலைதூர சூதாட்டங்களுக்கு முகவர்களாக இவர்கள் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
தொலைதூர சூதாட்டக் கும்பலைப் பிடிக்கும் நோக்கில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அமலாக்க வேட்டையில் ஈடுபட்டனர்.
பிடிபட்ட இருவரிடமும் தொலை தூர சூதாட்டத் தடைச் சட்டம் 2014ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொலைத்தொடர்பு சாதனம் மூலம் வேறிடத்திலிருந்து சூதாட்டத்தை வழிநடத்தும் குற்றத்துக்கு $5,000 வரையிலான அபராதமும் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அதேபோல தொலைதூர சூதாட்டத்தின் தலைமை முகவராக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுவோருக்கு $20,000க்கும் $200,000க்கும் இடைப்பட்ட அபராதமும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
எனவே எல்லா வகையான சட்டவிரோத சூதாட்டச் செயல்களில் இருந்தும் விலகி இருக்கு மாறு பொதுமக்களை போலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

