கிளமெண்டி அவென்யூ 6ல் உள்ள புளோக் 202ல் விவேக அஞ்சல் பெட்டியை ஓராண்டு செயல்படுத்திப் பார்க்கும் நடைமுறை நேற்றுத் தொடங்கியது. புதிதாக எவருக்காவது அஞ்சல் வந்தால் அதைக் கைபேசியிலேயே அவர்கள் தெரிந்துகொண்டு, அஞ்சலைப் பெறலாம்.
அவர்கள் செய்ய வேண்டியது க்யூஆர் குறியீட்டைப் பெற சிங்போஸ்ட் செயலியை தங்கள் கைபேசிகளில் பதிவிறக்க வேண்டும். அந்த குறியீட்டை தங்கள் அடுக்குமாடியின் கீழ்த்தளத்திலுள்ள அஞ்சல் இயந்திரத்தில் வருடி அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், சிங்போஸ்டின் அறிவார்ந்த அஞ்சல் பெட்டியை நேற்று தொடங்கி வைத்தார்.
சிங்போஸ்ட் செயலி மூலம் குடியிருப்பாளர்களுக்கு அஞ்சல் வருகை குறித்து அறிவிக்கப்படும். இச்செயலி, இன்னும் எடுக்கப்படாத அஞ்சல்களின் எண்ணிக்கையை சரிபார்க்கவும், மற்றவர்கள் தங்கள் சார்பாக அஞ்சல் பெறுவதை அங்கீகரிக்கவும் உதவுகிறது.
இது அஞ்சல்கள் கொடுக்கும் நேரத்தை 20 நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களாக குறைக்கும் என்று சிங்போஸ்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"குடியிருப்பாளர்கள் புதிய விஷயங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதில் விருப்பத்தையும் தயார்நிலையையும் காட்டியுள்ளனர். மின்னிலக்கமயமாதலில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு சிங்கப்பூர் வந்துள்ளது இது பிரதிபலிக்கிறது என நினைக்கிறேன்," என்று செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி சிம் கூறினார்.
ஆண்டுதோறும் நீடிக்கும் இந்த 'போஸ்ட்பேல்' திட்டம் படிப்படியாக கூடுதலான வட்டாரங்களில் அறிமுகம் காணும்.
கிளமெண்டியில் இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் அதிகாரிகளின் அனுமதியையும் பொறுத்து இந்தத் திட்டம், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும். வரும் வாரங்களில் கிளமெண்டி அவென்யூ 6 புளோக் 205ன் குடியிருப்பாளர்கள் இந்தச் சோதனைத் திட்டத்தில் பங்கேற்கலாம்.

