சிங்கப்பூரில் தொற்றுநோய்க்கான அடித்தளத்தை அமைக்க உதவிய பேராசிரியர் ரங்கா கிருஷ்ணனுக்கு (படம்) அதிபர் அறிவியல் தொழில் நுட்ப விருதுத் திட்டத்தின் கீழ் பதக்கம் வழங்கப்பட்டது.
இஸ்தானாவில் இந்தப் பதக்கத்தை அதிபரிடம் நேற்று பெற்றுக்கொண்டார். அசாதாரணமான ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் வழங்கும் ஆக உயரிய அங்கீகார விருது இது.
சிங்கப்பூரில் தொற்றுநோய் ஆய்வுகளுக்கான ஆதாரப் பணிகளை உருவாக்க உதவியுள்ள பேராசிரியர் இவர்.
64 வயதாகும் பேராசிரியர் ரங்கா கிருஷ்ணன் தற்போது சுகாதார அமைச்சின் தேசிய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவராக செயல்படுகிறார்.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் துறைத் தலைவராக 2008 முதல் 2015 வரை இவர் பதவி வகித்தார்.
அப்போது அத்துறையில் தொற்றுநோய் செயல்திட்டங்களைத் உருவாக்க இவர் உதவியுள்ளார்.
அந்தத் துறையைச் சேர்ந்த ஐந்து திட்டங்களில் ஒன்று இப்போதைய கொவிட்-19 கிருமி உட்பட பல்வேறு கிருமித் தொற்றுக் காலகட்டங்களின்போது பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக, அந்தத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நோய்களைக் கண்டுபிடிக்கக்கூடிய பரிசோதனை சாதனங்களையும் சிகிச்சைகளையும் ஒரு தடுப்பூசியையும்கூட உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் கொவிட்-19 கிருமியை நாடு சமாளிக்க உதவி இருக்கிறார்கள்.
வைரஸ் கிருமிகள், நுண்கிருமிகள் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்று என்பது அறிவியல் பூர்வமான உண்மை. குறிப்பாக இந்த வட்டாரத்திற்கு மிரட்டல் ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் மக்களின் சுகாதாரத்திலும் பொருளியலிலும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்று பேராசிரியர் ரங்கா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
"எதிர்காலத்தை கோடிகாட்டும் நிகழ்வு போல வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ் நோய்களைப் பற்றி ஆராய்ந்த அனுபவமுள்ள டாக்டர் வாங் லின்பா போன்ற தலைசிறந்த நிபுணர்களை எங்களால் ஈர்க்க முடிந்தது," என்று பேராசிரியர் ரங்கா கூறினார்.

