கொவிட்-19 கிருமியை ஒழித்துக்கட்ட உலகளவில் தடுப்பூசி போடும் இயக்கம் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது என்ற செய்தியைக் கேட்டதுமே பன்னாட்டு மக்களிடையே முதல் நம்பிக்கை துளிர்விட்டு இருப்பதை உணர முடிகிறது.
கொவிட்-19 கிருமிப் பிடியில் இருந்து எப்படித்தான் உலகம் மீளப்போகிறதோ என்று ஒவ்வொரு நாடும் செய்வதறியாது கைபிசைந்து நின்ற நிலையில் குறிப்பிடத்தக்க வரப்பிரசாதமாக தடுப்பூசி செய்தி வெளியாகி இருக்கிறது.
சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் முதலான வளர்ந்த நாடுகளும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்கி இருக்கின்றன.
அமெரிக்காவில் இதுவரை அந்த நாடு காணா அளவுக்கு தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்டது. பிரிட்டனிலும் ஊசி போடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் இந்த மாத முடிவில் மருந்து வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் தடுப்பூசி மருந்தைப் பெற்று அவற்றை மக்களுக்கு போட்டு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் உள்ள ஏராளமான சவால்கள், கொவிட்-19 கிருமியைச் சமாளிக்க பல நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் அளவிற்கு அதிகமாக இருக்கும் என்பதை எல்லா நாடுகளும் உணர்கின்றன.
அந்த மருந்தை அதற்குரிய குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது, விநியோகிப்பது, தளவாடப் போக்குவரத்து வசதிகள் முதலான பலவும் பல்வேறு நாடுகளையும் ஒப்பிடுகையில் பலதரப்பட்ட நிலைகளில் இருக்கின்றன.
இதனால் எல்லா நாடுகளிலும் விநியோகம் சீராக ஒரே வேகத்தில் இருக்காது என்றே தெரிகிறது. தடுப்பு மருந்தை விரும்பினால் நாடுகள் வாங்கிக் கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு நாடும் எப்படி இதில் செயல்படும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறது.
இவை எல்லாம் நடந்து, பெருவாரியான மக்களை கொவிட்-19 தடுப்பூசி எட்டி, அவர்களிடம் எதிர்ப்பாற்றலை உருவாக்க பல மாத காலங்கள் பிடிக்கும் என்பதை மறுக்க இயலாது.எப்படி இருந்தாலும் கொரோனா தடுப்பூசி உலகப் பொருளியலுக்கு உந்துசக்தியாக இருக்கும். அன்றாட வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்புவதை அந்த ஊசி வேகப்படுத்தும் என்பதுதான் இப்போதைக்கு ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.
ஆனால் இப்படிப்பட்ட ஒரு நிலை உடனடியாக ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தடுப்பூசி கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றலை மனிதர்களிடம் உண்டுபண்ணுமே தவிர அந்த ஊசி நேரடியாக பொருளியலை உசுப்பிவிடும் ஆற்றலைக் கொண்டதல்ல.
கொவிட்-19 காரணமாக வரலாறு காணாத அளவுக்கு உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு நாடும் தப்பவில்லை. இந்த பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை.
பல நாடுகளும்-வளர்ந்த நாடுகள்கூட இன்னமும் பலவீனமாகவே இருந்து வருகின்றன. உலகப் பொருளியல் இந்த ஆண்டு 4.4 விழுக்காடு சுருங்கும் என்று அனைத்துலகப் பண நிதியம் கணிக்கிறது. ஆசியப் பொருளியல்கள் 1.7 விழுக்காடு குறைந்துவிடும் என்றும் அது கருதுகிறது.
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று இல்லாமல் வேலையில்லா விகிதம் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்-19 காரணமாக அடுத்த ஆண்டு வாக்கில் மேலும் சுமார் 150 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவர்என்று உலக வங்கி எச்சரித்து இருக்கிறது.
ஆசியாவில் நிறுவனங்களும் வங்கிகளும் கடன் போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று அனைத்துலக நிதிக் கழகம் என்ற அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.
அநேகமாக அடுத்த ஆண்டில் பொருளியல் ஏறுமுகத்துக்குத் திரும்பிவிடும் என்பதற்கான அறிகுறிகள் ஓரளவுக்கு தெரியவந்து இருக்கின்றன என்றாலும் கொவிட்-19 பாதிப்புகள் நீண்டகாலத்துக்குத் தொடரும் என்றுதான் பல அமைப்புகளும் எச்சரித்து இருக்கின்றன. ஆகையால் ஓரிரண்டு நாடுகள் தடுப்பூசி துணையுடன் கொவிட்-19ஐ ஒழிப்பதில் வெற்றி காண்பது மட்டும் வழக்க நிலையை ஏற்படுத்திவிட முடியாது என்பதுதான் உண்மை.
குறிப்பாக மக்களின் எல்லை கடந்த நடமாட்டங்களைச் சார்ந்திருக்கும் சுற்றுப்பயணம் போன்ற துறைகள் மேம்பட வேண்டுமானால் அதற்கு பல நாடுகளின் நிலவரங்களும் மேம்பட வேண்டும் என்பது அவசியம்.
கொவிட்-19 கிருமியைக் கணிசமான அளவிற்கு ஒடுக்கிவிட்ட சிங்கப்பூர், மூன்றாம் கட்ட தளர்வை நடைமுறைப்படுத்த இருக்கிறது. தொழில்துறை வருகையாளர்களுக்காக பல நாடுகளோடும் தற்காலிக பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அது மும்முரமாக முயன்று வருகிறது. ஆனால் இந்த முயற்சிகளில் சிங்கப்பூர் பெறும் வெற்றி இதர நாடுகளின் நிலவரங்களையும் சார்ந்தே இருக்கும். அந்த நாடுகளிலும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும். கொவிட்-19 கிருமியை ஒடுக்குவதில் அவையும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவேண்டும்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருக்கும் பல நாடுகள் மறுபடியும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி வருவதைக் காண முடிகிறது. தற்காலிக பயண ஏற்பாடுகள் கூட முற்றிலும் ஆபத்து இல்லாதவை என்று கூறிவிட முடியாது. ஹாங்காங்கில் திடீரென கொரோனா தொற்று மறுபடியும் தலைதூக்கியதால் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் தொடங்க இருந்த தற்காலிக பயண திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆகையால் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், கொவிட்-19 தடுப்பூசி என்பது மிகமிக வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் பொருளியல் மேம்பட்டு வழக்க நிலை அடுத்த ஆண்டே திரும்பிவிடும் என்பதற்கான உத்தரவாதம் அதனிடம் இல்லை என்பதே உண்மை.
இது நாம் உட்பட ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது. கொவிட்-19 கிருமியை அலட்சியப்படுத்திவிடாமல் அவரவருக்குரிய பொறுப்பைப் பாதுகாப்புடன் நிறைவேற்றும் பட்சத்தில் புதிய தடுப்பூசிக்கு பலம் மேலும் இரண்டு மடங்கு கூடும்.

