மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் விருந்தினர்களில் சிலருக்கு கொவிட்-19 இருப்பதை அடுத்து அனைத்து விருந்தாளிகளின் தங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் இருப்பவர்கள் நேற்று முன்தினம் (டிசம்பர் 19) சோதனை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுவோரில் கொவிட்-19 தொற்றியுள்ள 13 பேரை விசாரித்து வருவதாகவும் அமைச்சு கூறியது.
இன்றைய தினம் இறுதிக்குள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக அந்த ஹோட்டல் தெரிவித்தது. வெளியேறிக்கொண்டிருந்த ஊழியர்களின் பைகளைத் தூக்க பாதுகாப்பு அதிகாரிகள் உதவி செய்து வந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. அத்துடன் குறைந்தது இரண்டு பாதுகாப்பு இடைவெளித் தூதுவர்கள் அந்த இடத்தில் காணப்பட்டனர்.
விருந்தினர்களில் பெரும்பாலானோர் குடும்பங்களாக இளம் பிள்ளைகளுடன் சென்றிருந்தனர்.
முழு தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொண்டிருந்த சிலர், ஹோட்டலின் ஒரு தனிப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஹோட்டல் விருந்தாளி தெரிவித்தார். "இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன். இருந்தபோதும், ஒரு நாள் முன்கூட்டியே வெளியேறி வீட்டில் பாதுகாப்புடன் இருப்பது நல்லது என எண்னினேன்," என்று தமது ஒன்பது மற்றும் ஏழு வயது மகள்களுடன் இரண்டு நாள் தங்கவிருந்த அந்த மாது கூறினார்.
விசாரணைகள் தற்போது தொடர்வதால் ஹோட்டல் எவ்வளவு காலம் தொடர்ந்து மூடியிருக்கும் என்பது பற்றி தகவல் இல்லை என்றது மாண்டரின் ஆர்ச்சர்ட்.

