தங்களுக்கு வழங்கப்பட்ட 'சிங்கப்பூர்ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டின் மதிப்பான 100 வெள்ளிக்கும் மேல் செலவிடப் பத்தில் ஆறு சிங்கப்பூரர்கள் தயாராக உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஹோட்டல் விடுதிகளில் தங்குவது, சுற்றுலாக்களுக்குச் செல்வது போன்ற பல்வேறு தெரிவுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய இப்பற்றுச்சீட்டு தொடர்பில் ஒரு வாரக் காலமாக இக்கணக்கெடுப்பு இணையம்வழி நடத்தப்பட்டது.
சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறைக்கு ஓர் உந்துதலாக இருப்பதற்கு கிட்டத்தட்ட $320 மில்லியன் மதிப்பிலான இந்தப் பற்றுச்சீட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஐந்து அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவுத் தளங்களை சிங்கப்பூரர்கள் பயன்படுத்தித் தங்களுக்கு விருப்பமான வகையில் பற்றுச்சீட்டை செலவழிக்கலாம்.
பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி முன்பதிவு செய்வோர், 100 வெள்ளிக்கும் அதிகமான தொகையைச் செலவழித்து வருவதாக ஐந்து தளங்களும் தெரிவித்துள்ளன.
பற்றுச்சீட்டைக் குறிப்பாக எதற்குப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, விலங்கியல் தோட்டத்திற்குச் செல்வதும் ஹோட்டலில் தங்குவதுமே பலரது பதில்களாக இருந்தது.
சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது, மரபுடைமை கலாசாரச் சுற்றுலாக்கள் மற்றும் தீவுச் சுற்றுலாக்களில் பங்கேற்பதிலும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பற்றுச்சீட்டை அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் பயன்படுத்திட வேண்டும்.
இதனால் சிங்கப்பூரர்களிடையே டிசம்பர் மாதம் மிகப் பிரபலமானதாக உள்ளது. ஜூன் மாதத்தில் பற்றுச்சீட்டைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக கணக்கெடுப்பில் பங்கேற்ற மூன்று விழுக்காட்டினர் மட்டுமே கூறினர்.
இருப்பினும், பற்றுச்சீட்டை இன்னொருவர் பெயருக்கு மாற்ற இயலாதது, பற்றுச்சீட்டுகளைச் சேர்த்துப் பயன்படுத்துவது போன்றவை இயலாத காரணத்தால் அதிருப்தி உள்ளதென 32.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

