சிங்கப்பூர் கடற்படையின் முதலாவது தலைவரும் சிங்கப்பூர் சீக்கிய சமூகத்தின் தூண்களில் ஒருவருமான திரு எஸ். ஜஸ்வந்த் சிங் கில் (படம்) கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 97.
கடந்த சனிக்கிழமை காலைஅவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தயார்ப்படுத்தும்போது அவர் வீட்டிலேயே மரணமுற்றார்.
திரு ஜஸ்வந்துக்கு இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர்.
தமக்கு ஆறு வயது இருக்கும்போது திரு ஜஸ்வந்த் தமது மாமாவுடன் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார்.
தற்காப்புத் துறையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய திரு ஜஸ்வந்த், 1963க்கும் 1966க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நடைபெற்ற 'கொண்ஃபிரண்டாசி' போரில் மலேசியா சார்பில் போரிட்டார்.
பிரிட்டிஷ் படைகள் 1967ஆம் ஆண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிய பிறகு, சிங்கப்பூர் கடற்படை தொண்டூழியர் பிரிவின் தலைவராக இருந்த திரு ஜஸ்வந்த், புலாவ் பிளாக்காங் மத்தி தீவில் உள்ள முகாமின் தலைவராகவும், சிங்கப்பூர் ஆயுதப்படை பயிற்சிப் பிரிவின் தலைவராகவும் தெங்கா மற்றும் சாங்கி ஆகாயப்படை தளங்களின் தலைவராகவும் பணியாற்றினார்.
லெஃப்டினண்ட் கர்னல் பதவியில் இருந்தபோது 1972ல் திரு ஜஸ்வந்த், சிங்கப்பூர் ஆயுதப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.
திரு ஜஸ்வந்தின் மறைவுக்கு நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் குடியரசு கடற்படை, திரு ஜஸ்வந்தின் உன்னத சேவைக்கு கடற்படை மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.
சிங்கப்பூர் கல்சா சங்கத்தின் தலைவராக 1966 முதல் 1981 வரை சேவையாற்றிய திரு ஜஸ்வந்த், சிங்கப்பூர் சீக்கியர் சமூகத்துக்கு அரும்பணியாற்றினார்.
கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் காரணமாக திரு ஜஸ்வந்தின் இரங்கல் சேவை 'ஸூம்' வழி நடத்தப்பட்டது. திரு ஜஸ்வந்தின் ஆறு பிள்ளைகளில் ஐவர் சிங்கப்பூரில் இல்லாததால், அவர்களும் வெளிநாட்டிலிருந்து தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளை 'ஸூம்' வழி கண்டனர் என்று திரு ஜஸ்வந்தின் உறவினரான 60 வயது திரு கிர்பால் சித்து கூறினார்.