எதிர்காலத்தில் பல்வேறு திறன்கள் பெற்ற ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவே பத்தில் ஏழு முதலாளிகள் உத்தேசித்துள்ளனர் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) லர்னிங்ஹப் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கிட்டத்தட்ட எல்லா முதலாளிகளும் மாறுபட்ட பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு அதிக தேவை இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.
கொவிட்-19 சூழலின் நெருக்கடிகளுக்கு இடையிலும் தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதில் உள்ள சிரமங்களையும் ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 72 விழுக்காட்டினர் சுட்டிக்காட்டினர்.
உற்பத்தி, வர்த்தகம், இணைப்பு உள்ளிட்ட ஆறு பெரிய தொழில்துறை குழுமங்களில் தொற்றுநோயின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக 367 வர்த்ககத் தலைவர்கள், 567 முழுநேர ஊழியர்களிடம் அக்டோபரில் இணையத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுத்த வர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் தனியார் துறையினர்.
கிட்டத்தட்ட 69% ஊழியர்கள் தங்கள் அன்றாட வேலைகளில் புதிய திறன்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறினர். 71 விழுக்காட்டினர் வேலைச் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க உயர்திறன், மறுதிறன்களின் அவசரத்தை உணர்ந்ததாகக் கூறினர்.
பெரும்பான்மையான முதலாளிகள்(84 விழுக்காட்டினர்) தொற்றுநோயின் விளைவாக தொழில்களில் ஏற்பட்ட மாற்றங்களால் ஊழியர்கள் புதிய திறன்களைப் பெறுவது அவசியம் என்றனர்.
பயனுள்ள தகவல் தொடர்பு, குழுப்பணி அல்லது ஒத்துழைப்பு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றை பணியாளர்களுக்கான மூன்று மிக மதிப்புமிக்க துணைத் திறன்களாக முதலாளிகள் குறிப்பிட்டனர்.
புத்தாக்கம், பகுப்பாய்வு பகுத்தறிவு, சிக்கலான சிக்கல் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் ஆகியவை ஊழியர்களிடம் போதுமான அளவு இல்லாத முதல் மூன்று திறன்கள் என்றும் அவர்கள் கூறினர்.
ஆய்வில் கலந்துகொண்ட ஊழியர்களில் பாதிப் பேர், பணியிடத்தில் அல்லது ஒட்டுமொத்த வேலைச் சந்தையில் போட்டித்தன்மையுடன் திகழ கடந்த ஆறு மாதங்களில் திறன்களை மேம்படுத்தியதாகக் கூறினர். எனினும் அவர்களில் 74% தங்கள் நிறுவனங்கள் திறன்கள் மேம்பாட்டில் கூடுதல் ஆதரவை வழங்கலாம் என என்றனர்.
"தொடர்ந்து மாற்றம் கண்டுவரும் உலகில், வேலைகளைப் பொறுத்தவரையில் ஒற்றைப் பாதையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. புதிய வழக்கநிலைகளில் செயல்படவும் வாய்ப்புகளைப் பெறவும், அண்மைய வேலைகள், தேவைப்படும் திறன்களைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். பின்னர் முதலாளி விரும்பும் பல பணிகள், துணைத் திறன்களை மேம்படுத்துவதற்கான உயர்திறன்களைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் 'என்டியுசி லர்னிங்ஹப்'பின் தலைவர் யூஜின் வோங்.

