தாதியர் இல்லத்தில் தங்கிய முதியவரை அடித்து உதைத்துத் துன்புறுத்திய ஆண் தாதிக்கு 16 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் தாதியர் இல்லத்தில் இந்தக் குற்றம் நிகழ்ந்தது.
தாதியர் இல்லத்தில் தங்கிய 67 வயது ஆடவர் ஆப்பிள் வெட்ட கத்தியைத் தருமாறு கேட்டபோது அதைக் கொடுக்க 36 வயது அல்வின் ஜே வர்காஸ் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அந்த முதியவர் பிடிவாதம் பிடித்து சத்தம் போட ஆரம்பித்தார்.
2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்தின் காரணமாக அந்த முதியவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கத்தியைக் கொடுக்க வார்காஸ் மறுத்ததை அடுத்து, அந்த முதியவர் தமது படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த அழைப்பு பொத்தானைத் தொடர்ந்து பலமுறை அழுத்தினார்.
அவரிடம் சென்று கத்தியைக் கொடுக்க முடியாததற்கான காரணத்தை வார்காஸ் விளக்கியும் அங்கிருந்த பல அழைப்பு பொத்தான்களை அந்த முதியவர் அழுத்தினார்.
அதுமட்டுமல்லாது, அழைப்பு பொத்தான்களை அந்த முதியவரிடமிருந்து எடுக்க வார்காஸ் முயன்றபோது அவரது சட்டையை அந்த முதியவர் பிடித்து இழுத்து கிழித்தார்.
இதனால் சினங்கொண்ட வார்காஸ், படுக்கையில் இருந்த அந்த முதியவரின் நெஞ்சில் குத்தினார்.
அதையடுத்து அந்த முதியவரின் படுக்கையையும் முதியவரையும் வார்காஸ் உதைத்ததாக அரசு வழக்கறிஞர் கூறினார்.
அப்போது அங்கிருந்த மற்ற தாதியர் இல்ல ஊழியர்கள் வார்காஸை நிறுத்தச் சொன்னார்கள்.
தாம் அந்த முதியவரைக் குத்தவில்லை என்று சம்பவம் குறித்து விசாரணை நடத்துபவர்களிடம் கூறும்படி சாட்சிகளில் ஒருவரிடம் வார்காஸ் பிறகு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
வார்காஸின் செயல் இரண்டு நாட்கள் கழித்து வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட முதியவரின் சகோதரர் அவரைக் காணச் சென்றபோது அதைப் பற்றி அவரிடம் அந்த முதியவர் தெரிவித்தார். முதியவரின் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர் கண்டார்.
அதையடுத்து, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அந்த முதியவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் ஏழு நாட்களுக்குத் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
அதையடுத்து அவர் ஜூரோங் சமூக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமது செயல் குறித்து வார்காஸ் வருத்தம் தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆல் செயிண்ட்ஸ் தாதியர் இல்லம் தம்மை பணி நீக்கம் செய்துவிட்டதாக வார்காஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நோயாளிகளின் நலனுக்கு தாதியர்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று இந்த வழக்கில் நீதிபதி ஜஸ்விந்தர் கோர் தெரிவித்தார்.
கோபம் காரணமாக ஒரு கணம் நிதானம் இழந்து அந்த முதியவரை வார்காஸ் தாக்கியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார் அவர்.
கோபத்தில் அந்த முதியவரை வார்காஸ் பல முறை அடித்து துன்புறுத்தியதை நீதிபதி சுட்டினார்.

