இந்தோனிசியாவில் இருந்து தருவிக்கப்படும் கிரேப் சின்னத்தைக் கொண்ட கறுப்பு மிளகு, கடைகளில் இருந்து மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு முகவை நேற்று அறிவித்துள்ளது.
அந்த மிளகில் உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவகைக் கிருமி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதால் உணவு முகவை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிரேப் சின்னத்தைக் கொண்ட இந்த மிளகு 50 கிராம், 90 கிராம் என புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அந்த மிளகுப் புட்டிகள் 2021 நவம்பர் 1 ஆம் தேதியும் 2021 அக்டோபர் 1ஆம் தேதியும் காலாவதியாகின்றன.
சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின்படி உள்ள நுண்ணுயிரியல் தரம் இந்தப் பொருளில் அதிகம் இருப்பதாக உணவு ஆணையம் தெரிவித்தது.
எனவே, சியெம் டிரேடிங் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட அந்த மிளகுப் புட்டிகள் யாவும் மீட்டுக் கொள்ளப்பட்டுவிட்டன.
உணவில் நச்சை ஏற்படுத்தவல்ல இந்தக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இந்த மிளகை உணவில் சேர்த்துக்கொள்வதால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படுத்தி வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.
இவ்வகைக் கிருமிகள் மண், விளைபொருட்கள், விலங்குகள் மீதான உன்னி போன்றவற்றில் காணப்படும் என்றும் முகவை தெரிவித்தது. இந்த மிளகுகளை யாரேனும் வாங்கியிருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு அந்த மிளகைப் பயன்படுத்திய உணவை உட்கொண்டிருந்தால் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுமாறும் முகவை கேட்டுக் கொண்டுள்ளது.

