தாய் எழுதிய உயில் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய இரு பிள்ளைகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உடன்பிறந்தவர்கள் மூவருக்கு வழங்கப்பட்ட சொத்துகளைவிட தங்களுக்கு குறைவான பங்கு வழங்கப்பட்டதாக அவர்கள் வழக்குத் தொடுத்திருந்தனர்.
செல்வச் செழிப்புமிக்க அந்த மாது கணவரை இழந்த பிறகு உயில் எழுதி வைத்திருந்தார். இவர், மிகப் பெரிய செல்வந்தருடன் வாழ்க்கை நடத்திய நான்கு பெண்களில் ஒருவர். ஆனால் வீட்டை இவர்தான் கட்டிக்காத்து வந்தார். 2016ஆம் ஆண்டில் தமது 81வது வயதில் அவர் காலமானார். அவருக்கு ஐந்து பிள்ளைகள்.
2002 மே மாதம் அவர் எழுதிய உயிலில் மூத்த மகனுக்கும் இரண்டாவது மகனுக்கும் கடைசி மகனுக்கும் ஆளுக்கு ஒரு பங்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரே மகளுக்கு சொத்தில் அரைப் பங்கு மட்டுமே கிடைத்தது.
அவரது 3வது மகனுக்கு 10,000 வெள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உயில் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மகளும் 3வது மகனும் வழக்குத் தொடுத்தனர்.
உயில் எழுதியபோது 'bipolar disorder' எனப்படும் இருவேறு மனநிலையைக் கொண்ட நோய் தாய்க்கு இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.
எழுத்துபூர்வமாக எழுதப்பட்ட தீர்ப்பில் அந்த சமயத்தில் அந்த மாதுக்கு மனக்குழப்பதை ஏற்படுத்தும் கோளாறு இல்லை என்று நீதித் துறை ஆணையர் டான் புவே பூன் தெரிவித்தார்.
தாயார் உயில் எழுதும் நிலையில் இல்லை என்ற 3வது மகன் மற்றும் மகளின் வாதத்தையும் நீதிபதி நிராகரித்தார்.
மூத்த மகனும் 2வது மகனும் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி உயில் எழுத வைத்ததாகக் கூறியதையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
கேன்டனிஸ் பேசும் அந்த மாது விட்டுச்சென்ற சொத்துகளில் தஞ்சோங் காத்தோங்கில் உள்ள 856.9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குடும்பச் சொத்தும் அடங்கும். இதன் மதிப்பு சுமார் 10 மில்லியன் வெள்ளியாகும்.
இந்த உயில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தால் ஐந்து பிள்ளைகளுக்கும் இந்தச் சொத்தில்இருந்து சமமான பங்கு கிடைத்திருக்கும்.
தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனுக்கு 10,000 வெள்ளியும் தத்தெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கு தலா 5,000 வெள்ளியும் வழங்க வேண்டும் என்று அந்த மாது உயிலில் கூறியிருந்தார்.

