தாய் எழுதிய உயில் செல்லும் எனத் தீர்ப்பு; இரு பிள்ளைகளுக்கு ஏமாற்றம்

தாய் எழுதிய உயில் செல்லும் எனத் தீர்ப்பு; இரு பிள்ளைகளுக்கு ஏமாற்றம்

2 mins read
bc8ee620-d2b1-4a6f-b16d-ba078db50955
-

தாய் எழு­திய உயில் செல்­லாது என்று அறி­விக்­கக் கோரிய இரு பிள்­ளை­க­ளின் மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.

உடன்­பி­றந்­த­வர்­கள் மூவ­ருக்கு வழங்­கப்­பட்ட சொத்­து­க­ளை­விட தங்­க­ளுக்கு குறை­வான பங்கு வழங்­கப்­பட்­ட­தாக அவர்­கள் வழக்­குத் தொடுத்­தி­ருந்­த­னர்.

செல்­வச் செழிப்­பு­மிக்க அந்த மாது கண­வரை இழந்த பிறகு உயில் எழுதி வைத்­தி­ருந்­தார். இவர், மிகப் ­பெ­ரிய செல்­வந்­த­ரு­டன் வாழ்க்கை நடத்­திய நான்கு பெண்­களில் ஒரு­வர். ஆனால் வீட்டை இவர்­தான் கட்­டிக்­காத்து வந்­தார். 2016ஆம் ஆண்­டில் தமது 81வது வய­தில் அவர் கால­மா­னார். அவ­ருக்கு ஐந்து பிள்­ளை­கள்.

2002 மே மாதம் அவர் எழு­திய உயி­லில் மூத்த மக­னுக்­கும் இரண்­டா­வது மக­னுக்­கும் கடைசி மக­னுக்­கும் ஆளுக்கு ஒரு பங்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரே மக­ளுக்கு சொத்­தில் அரைப் பங்கு மட்­டுமே கிடைத்­தது.

அவ­ரது 3வது மக­னுக்கு 10,000 வெள்ளி மட்­டுமே வழங்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் உயில் செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி மகளும் 3வது மக­னும் வழக்­குத் தொடுத்­த­னர்.

உயில் எழு­தி­ய­போது 'bipolar disorder' எனப்படும் இருவேறு மனநிலையைக் கொண்ட நோய் தாய்க்கு இருந்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

ஆனால் இதனை ஏற்­றுக்­கொள்ள நீதி­பதி மறுத்­து­விட்­டார்.

எழுத்­து­பூர்­வ­மாக எழு­தப்­பட்ட தீர்ப்­பில் அந்த சம­யத்­தில் அந்த மாதுக்கு மனக்­கு­ழப்­பதை ஏற்­ப­டுத்­தும் கோளாறு இல்லை என்று நீதித் துறை ஆணை­யர் டான் புவே பூன் தெரி­வித்­தார்.

தாயார் உயில் எழு­தும் நிலை­யில் இல்லை என்ற 3வது மகன் மற்­றும் மக­ளின் வாதத்­தை­யும் நீதி­பதி நிரா­க­ரித்­தார்.

மூத்த மக­னும் 2வது மக­னும் தங்­க­ளு­டைய செல்­வாக்­கைப் பயன்­ப­டுத்தி உயில் எழுத வைத்­த­தா­கக் கூறி­ய­தை­யும் அவர் ஏற்க மறுத்­து­விட்­டார்.

கேன்டனிஸ் பேசும் அந்த மாது விட்­டுச்­சென்ற சொத்­து­களில் தஞ்­சோங் காத்­தோங்­கில் உள்ள 856.9 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட குடும்­பச் சொத்­தும் அடங்­கும். இதன் மதிப்பு சுமார் 10 மில்­லி­யன் வெள்­ளி­யா­கும்.

இந்த உயில் செல்­லாது என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தால் ஐந்து பிள்­ளை­க­ளுக்­கும் இந்­தச் சொத்­தில்­இருந்து சம­மான பங்கு கிடைத்­தி­ருக்­கும்.

தனது கண­வ­ரின் முதல் மனை­விக்­குப் பிறந்த மக­னுக்கு 10,000 வெள்­ளி­யும் தத்­தெ­டுக்­கப்­பட்ட இரண்டு பிள்­ளை­க­ளுக்கு தலா 5,000 வெள்­ளி­யும் வழங்க வேண்­டும் என்று அந்த மாது உயி­லில் கூறி­யி­ருந்­தார்.