கொவிட்-19 பரவும் அச்சம் காரணமாக இவ்வாண்டு மெரினா பே வட்டாரத்தில் புத்தாண்டை வரவேற்கும் வாணவேடிக்கை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் மற்ற 11 இடங்களில் புத்தாண்டை வரவேற்கும் வாணவேடிக்கை நடக்கவிருக்கிறது. இவ்வாண்டு இறுதி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
பீடோக், தெம்பனிஸ், பீஷான், இயூ டீ ஆகிய வீவக பேட்டைகளில் வாணவேடிக்கை நடைபெறும். இந்தக் காட்சி மற்ற தொகுதிகளில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளியேற்றப்படும் என்று மக்கள் கழகம் தெரிவித்தது.
"மெய்நிகர் காட்சிகள் மூலம் ஆண்டிறுதி கொண்டாட்டத்தை பாதுகாப்பான வழியில் கொண்டாட முடியும், நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தவாறே ரசிக்க முடியும்.
"2020 இறுதியை நெருங்கி வரும் வேளையில் 3வது கட்ட தளர்வுக்குள் நுழையவிருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் மக்கள் கழகம் குறிப்பிட்டது.
ஆண்டு இறுதி நிகழ்ச்சிகளில் இரண்டு ஞாயிறு அன்று பல்வேறு தொகுதிகளில் நடைபெறும் என்றும் அது கூறியது.
இதர 12 நிகழ்ச்சிகள் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவிலும் எஞ்சிய இரண்டு நிகழ்ச்சிகள் புத்தாண்டு அன்று நடைபெறும்.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் மார்சிலிங்-இயூ டீ தொகுதியின் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் உள்ளூர் பிரபல கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
பீடோக், தெம்பனிஸ், பீஷான், இயூ டீ தவிர பூன் லே, கேலாங், ஹவ்காங், ஜூரோங், வெஸ்ட் கோஸ்ட், தியோங் பாரு, உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களிலும் வாணவேடிக்கை காட்சிகள் இடம்பெறும்.