கொலை வழக்கு: தற்காப்பு தரப்பில் 3 வழக்கறிஞர்கள்

கொலை வழக்கு: தற்காப்பு தரப்பில் 3 வழக்கறிஞர்கள்

3 mins read
f1847cad-e651-4592-a447-f178b8b4afdf
குமாரி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்ற மாதை 2007ல் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆடவர் ஒருவரை, வழக்கறிஞர்கள் அடங்கிய ஒரு குழு விசாரணையில் பிரதிநிதிக்கும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  படங்கள்: THE NEW PAPER, DANIAL ENEMIKO/FACEBOOK -

குமாரி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்ற மாதை 2007ல் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆடவர் ஒருவரை, வழக்கறிஞர்கள் அடங்கிய ஒரு குழு விசாரணையில் பிரதிநிதிக்கும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகம்மது டேனியல் முகம்மது ரஃபாயி என்ற அந்த ஆடவரைத் தானும் திருவாட்டி தனியா சின், திருவாட்டி லாரா இயோ ஆகிய வழக்கறிஞர்களும் தற்காத்து வாதாடப் போவதாக 'விதர்ஸ் கத்தார் வோங்' சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷஷி நாதன் தெரிவித்தார்.

இந்த வழக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அகம்மதுக்கு இப்போது வயது 35 ஆகிறது. அவர் 2007 ஜூன் 30 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் மரின் டெர்ரஸ் அடுக்குமாடி வீடு ஒன்றில் குமாரி டியோவை, 19, கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான அந்த ஆடவர், ராஜில் புத்ரா செடியா சுக்மராஜனா, 34, என்ற வேறு ஓர் ஆடவருடன் சேர்ந்து இந்தச் செயலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ராஜில் இன்னமும் பிடிபடவில்லை. இரண்டு ஆடவர்களும் குமாரி டியோவுக்கு நண்பர்கள் என்று நம்பப்படுகிறது. அந்தப் பெண் பிராஸ் பாஷாவில் இருக்கும் தன் வீட்டில் இருந்து 2007 ஜூன் 29ல் வெளியேறினார்.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவரைப் பார்க்கவே இல்லை. குமாரி டியோ காணாமல் போனதை அடுத்து அவர் வீட்டைவிட்டு ஓடிவிட்டார் என்று பரபரப்பாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் நண்பர்களும் அதை நம்பவில்லை.

தன் பெண்ணைக் காணவில்லை என்று குமாரி டியோவின் தாயார் 2007 ஜூலை 3 ஆம் தேதி போலிசிடம் புகார் தெரிவித்தார்.

புலன்விசாரணை தொடங்கியது.

குமாரி டியோ, மரின் டெர்ரசில் இருக்கும் ஒரு மின்தூக்கிக்குள் இரண்டு ஆடவர்களுடன் நுழைந்ததைப் பிரத்தியேகப் படச்சாதனங்கள் காட்டின.

அவர்கள் இரண்டு பேரையும் விசாரித்தபோது குமாரி டியோ மரின் டெர்ரஸ் வீட்டைவிட்டு தானே வெளியேறிவிட்டதாகக் கூறிவிட்டனர். அந்தப் பெண் காணாமல் போய் இருந்ததற்கும் அந்த இரண்டு ஆடவர்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதும் கிடைக்காததை அடுத்து குமாரி டியோ காணாமல் போய்விட்டதாக முதலில் போலிஸ் வழக்குப் பதிந்தது.

குமாரி டியோவைத் தேட அந்தப் பெண்ணின் நண்பர்களும் குடும்பத்தினரும் பெரு முயற்சிகளை மேற்கொண்டனர். சுமார் 200 பேர் இதில் ஈடுபட்டு இருந்தனர். செய்தித்தாட்களில் விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன.

இதனிடையே, போலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டுவரை இந்த வழக்கை கால அட்டவணைப்படி மறுபரிசீலனை செய்தனர்.

வழக்கு இந்த ஆண்டு ஜூலையில் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், புதிய தடயங்களைக் கண்டுபிடித்தனர். டிசம்பர் 15 ஆம் தேதி அகம்மது கைதானார். இரண்டு நாட்கள் கழித்து அவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.

குமாரி டியோ, மரின் டெர்ரசில் இருக்கும் ஒரு மின்தூக்கிக்குள் இரண்டு ஆடவர்களுடன் நுழைந்ததற்கு அடுத்த நாளன்று அகம்மதும் ராஜிலும் அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்