கொலை வழக்கு: தற்காப்பு தரப்பில் 3 வழக்கறிஞர்கள்

கொலை வழக்கு: தற்காப்பு தரப்பில் 3 வழக்கறிஞர்கள்

3 mins read
5ec207cc-ce8b-4aab-bce7-9250e7651527
ஃபெலிசியா டியோ வெய் லிங் (இடது) என்ற பெண்ணைக் கொலை செய்ததாக அகம்மது டேனியல் முகம்மது ரஃபாயி (வலது) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படம்: தி நியூ பேப்பர், டேனியல் எனிமிகோ/ ஃபேஸ்புக் -

குமாரி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்ற மாதை 2007ல் கொலை செய்­த­தாக குற்­றம் சுமத்­தப் பட்டுள்ள ஆட­வர் ஒரு­வரை, வழக்­க­றி­ஞர்­கள் அடங்­கிய ஒரு குழு விசா­ர­ணை­யில் பிர­தி­நிதிக்கும் என்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

அகம்­மது டேனி­யல் முகம்­மது ரஃபாயி என்ற அந்த ஆட­வ­ரைத் தானும் திரு­வாட்டி தனியா சின், திரு­வாட்டி லாரா இயோ ஆகிய வழக்கறிஞர்களும் ­தற்­காத்து வாதா­டப் போவ­தாக 'விதர்ஸ் கத்­தார் வோங்' சட்ட நிறு­வ­னத்­தைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் சஷி நாதன் தெரி­வித்­தார்.

இந்த வழக்கு டிசம்­பர் 31 ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. அகம்­ம­துக்கு இப்­போது வயது 35 ஆகிறது. அவர் 2007 ஜூன் 30 ஆம் தேதி அதி­காலை நேரத்­தில் மரின் டெரஸ் அடுக்கு­மாடி வீடு ஒன்­றில் குமாரி டியோவை, 19, கொலை செய்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான அந்த ஆட­வர், ராஜில் புத்ரா செடியா சுக்­ம­ரா­ஜனா, 34, என்ற வேறு ஓர் ஆட­வ­ரு­டன் சேர்ந்து இந்­தச் செயலை செய்து இருக்­கி­றார் என்று கூறப்­படு­கிறது.

ராஜில் இன்­ன­மும் பிடி­ப­ட­வில்லை. இரண்டு ஆட­வர்­களும் குமாரி டியோ­வுக்கு நண்­பர்­கள் என்று நம்பப்­ப­டு­கிறது. அந்­தப் பெண் பிராஸ் பாசாவில் இருக்­கும் தன் வீட்­டில் இருந்து 2007 ஜூன் 29ல் வெளி­யே­றி­னார்.

அதற்­குப் பிறகு அந்­தப் பெண்­ணின் பெற்­றோர்­ அவ­ரைப் பார்க்­கவே இல்லை. குமாரி டியோ காணா­மல் போன­தை அடுத்து அவர் வீட்­டை­விட்டு ஓடி­விட்­டார் என்று பர­ப­ரப்­பாக அப்போது செய்தி­கள் வெளி­யா­யின.

ஆனால் அந்­தப் பெண்­ணின் குடும்­பத்தினரும் நண்­பர்­களும் அதை நம்­ப­வில்லை.

தன் பெண்­ணைக் காண­வில்லை என்று குமாரி டியோ­வின் தாயார் 2007 ஜூலை 3 ஆம் தேதி போலி­சி­டம் புகார் தெரி­வித்­தார்.

புலன்­வி­சா­ரணை தொடங்­கி­யது. குமாரி டியோ, மரின் டெரசில் இருக்­கும் ஒரு மின்­தூக்­கிக்­குள் இரண்டு ஆட­வர்­க­ளு­டன் நுழைந்­ததைப் பிரத்­தியே­கப் படச்­சாதனங்­கள் காட்­டின.

அவர்­கள் இரண்டு பேரை­யும் விசா­ரித்­த­போது குமாரி டியோ மரின் டெரஸ் வீட்­டை­விட்டு தானே வெளி­யேறிவிட்­ட­தா­கக் கூறி­விட்­ட­னர். அந்­தப் பெண் காணா­மல் போய் இருந்­த­தற்­கும் அந்த இரண்டு ஆட­வர்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் எதும் கிடைக்­கா­ததை அடுத்து குமாரி டியோ காணா­மல் போய்­விட்­ட­தாக முத­லில் போலிஸ் வழக்­குப் பதிந்­தது.

குமாரி டியோ­வைத் தேட அந்­தப் பெண்­ணின் நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் பெரு முயற்­சி­களை மேற்­கொண்­ட­னர். சுமார் 200 பேர் இதில் ஈடு­பட்டு இருந்­த­னர். செய்­தித்­தாட்­களில் விளம்­பரங்­களும் கொடுக்­கப்­பட்­டன.

இத­னி­டையே, போலிஸ் அதி­கா­ரி­கள் இந்த ஆண்டுவரை­ இந்த வழக்கை கால அட்டவணைப்படி மறு­ப­ரி­சீலனை செய்­த­னர்.

வழக்கு இந்த ஆண்டு ஜூலை­யில் உள­வுத்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந்­தத் துறை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், புதிய தட­யங்­க­ளைக் கண்­டு­பி­டித்­த­னர். டிசம்­பர் 15 ஆம் தேதி அகம்­மது கைதா­னார். இரண்டு நாட்­கள் கழித்து அவர் மீது மாவட்ட நீதி­மன்­றத்­தில் கொலைக் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

குமாரி டியோ, மரின் டெ­ர­சில் இருக்­கும் ஒரு மின்­தூக்­கிக்­குள் இரண்டு ஆட­வர்­க­ளு­டன் நுழைந்­த­தற்கு அடுத்த நாளன்று அகம்­ம­தும் ராஜி­லும் அந்­தப் பெண்­ணைக் கொலை செய்­து­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.