பேருந்துக்கு என்று ஒரு தடத்தை ஒதுக்க முடியாதபடி சாலை மிகவும் குறுகலாக இருக்கும் இடங்களில் பேருந்துகள் செல்ல முன்னுரிமை அளிப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு வருகிறது.
மெய்நிகர் பேருந்து தடங்களை ஏற்படுத்துவது இதற்கான தீர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது. லோரோங் ஆ சூவில் இத்தகைய ஏற்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அப்பர் பாய லேபாரில் உள்ள அந்த இரண்டு தடச் சாலையில் அதிக பேருந்துகள் சென்று வருகின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் 'டியுஎம் கிரியேட்' என்ற நிறுவனத்துக்கும் இடையில் ஆய்வு ஒத்துழைப்பாக இந்த ஏற்பாடு பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தேவைப்படும்போது பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் பேருந்துத் தடங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் உணர் கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு ஒத்துழைப்பு விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
ஜெர்மனியின் மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டையும் சேர்ந்த ஆய்வாளர்கள், டியுஎம் கிரியேட் பொதுப் போக்குவரத்து ஆய்வுத் தளத்தை நிர்வகித்து நடத்தி வருகிறார்கள்.
லோரோங் ஆ சூவில் ஒரு மணி நேரத்தில் 35 பேருந்துகள் ஹவ்காங் அவென்யூ 3ஐ நோக்கிச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டிசம்பர் 1ல் இணைய ஆய்வரங்கு ஒன்று நடந்தது.
அதில் டியுஎம் கிரியேட் நிறுவனத்தின் ஆய்வாளரான ஆன்டிரியாஸ் ரா பேசினார். லோரோங் ஆ சூவின் 900 மீட்டர் நீளமுள்ள பகுதி மெய்நிகர் பேருந்து தடப் பரிசோதனைக்கு ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சாலையில் பேருந்து வரும்போது அதை இந்த உணர் கருவி கண்டறியும். உடனே மற்ற வாகனங்கள் வலது பக்கமாகச் சென்று, இடதுபக்க தடத்தில் பேருந்து ெசல்ல வழி விடுமாறு அந்தச் சாதனம் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிப்பு விடுக்கும் என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய மெய்நிகர் பேருந்து தட முறை பிரிட்டனிலும் சுவிட்சர்லாந்திலும் உள்ள நகர்களில் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது. அல்லது உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
சிங்கப்பூரில் மொத்தம் 211 கி.மீ. பேருந்து வழித்தடங்கள் இருக்கின்றன. அவை வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பேருந்துகள் செல்ல உரிமை அளிக்கின்றன.
அதில் 23 கி.மீ. முற்றிலும் பேருந்து தடங்களாகும். இவை திங்கள் முதல் சனி வரை காலை 7.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை செயல்படுகின்றன.
உட்லண்ட்ஸ் பேட்டையை நகரத்தோடு இணைக்கும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைப் பாதை புதிதாக அமையவிருக்கிறது. இந்த 21.5 கி.மீ. சாலை முழுவதும் இரு திசைகளிலும் பேருந்து தடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதனிடையே, இத்தகைய மெய்நிகர் பேருந்து தடங்கள் பலன் அளிக்குமா என்று கேட்டபோது, பெரும்பாலானவற்றைப் போலவே இதற்கும் அபராதம் நடப்புக்கு வந்தால் விரும்பிய பலன் ஏற்படும் என்று சர்ஜித் சிங் என்ற 54 வயது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இருந்தாலும் சிங்கப்பூரில் பேருந்து தடக் கட்டுப்பாடுகள் பொதுவாக மீறப்படாமல் கடைப்பிடிக்கப்படுவதாக மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான திரு சிங் கூறினார்.

