ராஃபிள்ஸ் ஹோட்டலும் ஜுவல் சாங்கி விமான நிலையமும் சிங்கப்பூர் சுற்றுலாத் துறையின் தலைசிறந்த விருதுகளை வென்றுள்ளன.
சென்ற ஆண்டில் சிறந்த முறையில் தொண்டாற்றிய தனிப்பட்டவர்களும் அமைப்புகளுமாக மொத்தம் 29 பேர் அங்கீகரித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் டிசம்பர் 18ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் விருது விவரங்களை அறிவித்தது. சுற்றுலாத் துறைக்குத் தலைசிறந்த தொண்டாற்றியது; தலைசிறந்த கடைத்தொகுதியாக திகழ்ந்தது; தலைசிறந்த கவர்ச்சி இடமாக விளங்கியது ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதல் பரிசை ஜூவல் சாங்கி பெற்றது.
ஜுவல் சாங்கி சென்ற ஆண்டு ஏப்ரலில் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் ஆறு மாதங்களில் சுமார் 50 மில்லியன் வருகையாளர்களை அது கவர்ந்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்ட ராஃபிள்ஸ் ஹோட்டல், தலைசிறந்த ஹோட்டல் அனுபவத்தைக் கொண்ட ஒன்றாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
சுற்றுலாத் துறைக்குத் தனிச்சிறப்புமிக்க தொண்டாற்றியதற்காக வனவிலங்கு ஆலோசனையாளரான சுபராஜ் ராஜதுரைக்கு ஆயுட்கால சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. வனவிலங்கு வல்லுநராக 35க்கும் அதிக ஆண்டு காலம் தொண்டாற்றி இருக்கும் திரு சுபராஜ், சென்ற ஆண்டு அக்டோபரில் மரணம் அடைந்தார்.
இவர் சிங்கப்பூரின் சில பசுமை வளங்களைக் கட்டிக்காக்க ஓய்வின்றி பாடுபட்டு இருக்கிறார் என்று கழகம் பாராட்டியது.

