பொருளியல் வளர்ச்சிக் கழகத்திற்கு முற்றிலும் சொந்தமான வடிவமைப்பு சிங்கப்பூர் மன்றம் அண்மையில் வடிவமைப்புக் கல்வி ஆலோசனைக் குழு என்ற ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தியது.
தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய முதலாவது குழு இதுதான்.
புதிய குழுவில் தொழில்துறைத் தலைவர்கள் ஒன்பது பேரும் உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 14 கல்வியாளர்களும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இவர்களை வர்த்தக தொழில் அமைச்சு நியமித்துள்ளது.
குழுவுக்குத் திரு லோ சியாவ் ஹுவெய் தலைவராக இருக்கிறார்.
'பிலிப்ஸ் ஆசியான் பசிபிக்' என்ற நிறுவனத்தில் ஆசிய பசிபிக்கின் வடிவமைப்புத் துறைக்குத் தலைமை வகிக்கும் இவரை இரண்டு ஆண்டுகளுக்குப் புதிய குழுவின் தலைவராக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நியமித்து இருக்கிறார்.
திரு லோ அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஒரு பேட்டி அளித்தார். வடிவமைப்புக் கல்வி இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் நடைமுறையாக வளர்ந்து உள்ளது எப்படி என்பதை அவர் பேட்டியில் விளக்கினார்.
மக்களின் அன்றாட அனுபவங்களில் வடிவமைப்பு அதிக இடம் பிடித்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவீன பொருளியலுக்கு மிக முக்கியமான அம்சங்களை உள்ளடக்கும் வடிவமைப்பாளர் கல்வி இப்போது அங்கீகரிக்கப்பட்டு இருப்பதே இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்று அவர் தெரிவித்தார்.
உயர்கல்வி நிலையங்களில் வடிவமைப்புக் கல்வியைக் கை கொண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கும் எப்படி தீர்வுகளைக் காணலாம் என்பது பற்றி இந்தப் புதிய ஆலோசனைக் குழு ஆராயும் என்று அவர் குறிப்பிட்டார்.

