சிங்கப்பூரில் நேற்று புதிதாக 13 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.
சமூகத்திலோ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. புதிதாக கிருமி தொற்றியவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,495ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, பிரிட்டனில் வேகமாகப் பரவக்கூடிய புதிய வகை கொரோனா கிருமி ஒருவரை தொற்றியிருப்பது இங்கு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. அவர் பிரிட்டனில் படிக்கும் 17 வயது சிங்கப்பூர் பெண். இம்மாதம் 6ஆம் தேதி அவர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் இங்கு வந்தவுடன் வசிப்பிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வந்த அடுத்த நாள் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இம்மாதம் 8ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அந்த மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதியானதாக அமைச்சு கூறியது.
பிரிட்டனில் 'பி117' எனும் புதிய வகை கிருமி பரவி வருவதைத் தொடர்ந்து, அண்மையில் ஐரோப்பாவில் இருந்து இங்கு வருபவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு 'வைரல் ஜெனோமிக் சீகுவன்சிங்' எனும் பரிசோதனையை தேசிய பொதுச் சுகாதார ஆய்வகம் நடத்தி வருவதாக அமைச்சு விவரித்தது.
எஸ்ஐஏ சிப்பந்திகள் 'என்95' ரக முகக்கவசம் அணிய வேண்டும்
இந்நிலையில், பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இருந்து இங்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்களில் பணிபுரியும் சிப்பந்திகள் 'என்95' ரக முகக்கவசங்களையும் பாதுகாப்புச் சாதனங்களையும் அணிய வேண்டும்.
இங்கு வந்தவுடன் அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும். தொற்று இல்லை என உறுதியாகும் வரை, பணியாளர்கள் மற்ற விமானங்களில் பணியைத் தொடர அனுமதிக்கப்படாது.
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே பெரும்பாலான நாட்களில் எஸ்ஐஏ இரு நேரடி விமானச் சேவைகளை வழங்குகிறது. விமானப் பயணங்கள் ஏறத்தாழ 13 மணி நேரம் எடுக்கும்.
லண்டனில் இருந்து இங்கு வரும் விமானப் பணியாளர்கள் பாதுகாப்புச் சாதனங்களை அணிவதற்கான கூடுதல் விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல் நடப்புக்கு வந்தன.
விமானப் பயணங்களின்போது விமானச் சிப்பந்திகள் ஏற்கெனவே பாதுகாப்புக் கண்ணாடிகள், கையுறைகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை அணிந்துதான் பணிபுரிகின்றனர்.

