மீடியாகார்ப் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த கலைஞர் ஜெஃப்ரி ஸுவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவரது இல்லத்தில் பலர் ஒன்றுகூடியதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் அத்துமீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதில் சம்பந்தப்பட்ட மீடியாகார்ப் கலைஞர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சு, இச்சம்பவம் தனது கவனத்திற்கு வந்திருப்பதாகவும் விசாரணை நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்தியது.
"இத்தகைய விதிமுறை மீறல்களை தேசிய வளர்ச்சி அமைச்சும் மற்ற அரசாங்க அமைப்புகளும் கடுமையாகக் கருதுகின்றன. பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை மீறியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்," என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கொவிட்-19 விதிமுறைகள் மீறப்பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்ததைத் தொடர்ந்து, ஜெஃப்ரி ஸு உட்பட மூன்று மீடியாகார்ப் கலைஞர்கள் நேற்று முன்தினம் மன்னிப்புக் கோரினர்.
அக்டோபர் 3ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம், 13 பேரும் ஒருவர் மற்றொருவருடன் நெருக்கமாக நிற்பதைக் காட்டியது. அந்தப் படத்தில் பிறந்தநாள் கேக் ஒன்றை ஸு கையில் வைத்திருந்தார்.
அந்தப் படத்தில் எவரும் முகக்கவசம் அணியவில்லை.
அக்டோபர் 3ஆம் தேதி தமது 32வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸு, பெரிய ஒன்றுகூடலைக் காட்டும் புகைப்படப் பதிவு ஒன்றைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டதாக ஷின் மின் சீன நாளிதழ் வாசகர் ஒருவர் அந்த நாளிதழுக்கு நேற்று முன்தினம் தெரியப்படுத்தினார்.
அதன் பிறகு அந்த நாளிதழுக்கு மீடியாகார்ப் நிறுவனம் அறிக்கை ஒன்றை விடுத்தது. அதில், தமது நிர்வாகத்தின்கீழ் ஸு உட்பட மூன்று கலைஞர்கள் பிறந்தநாள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டதை உறுதிப்படுத்தியதாக அது கூறியது. தங்களது செயல் குறித்து அந்த மூவரும் வருத்தம் தெரிவித்ததாகவும் தவற்றுக்காக அவர்கள் மன்னிப்புக் கூறியதாகவும் அது சொன்னது.
கொவிட்-19 விதிமுறைகளைத் தான் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய மீடியாகார்ப், தொழில்முறை ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு தனது கலைஞர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளதாகச் சொன்னது.

