சிங்கப்பூரில் வீடற்றவர்களுக்கு உதவும் ஒரு கட்டமைப்பு (Peers) விரிவடைகிறது. அதில் அறப்பணி மற்றும் சமய அமைப்புகள் உள்ளிட்ட ஒன்பது அமைப்புகள் புதிதாக சேர்ந்துள்ளன. கொவிட்-19 சூழலில் அத்தகைய பாதிப்புக்கு ஆளாவோருக்கு உறைவிடத்தைக் கண்டுபிடிக்க இதன்மூலம் முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2019 ஜூலையில் அந்தக் கட்டமைப்பை அமைத்தது. வீடு இல்லாமல் பொது இடங்களில் படுத்து உறங்குவோருக்கு உதவவேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட தளர்வுகள் நடப்புக்கு வரும்போது இந்தத் தேவை மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்து இருக்கிறார். கத்தோலிக்க நல்வாழ்வுச் சேவை என்ற அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியையொட்டி அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். அவரும் இந்த நல்வாழ்வுச் சேவையைச் சேர்ந்த ஊழியர்களும் பிராஸ் பாசா வட்டாரத்தில் பல வீதிகளிலும் படுத்து உறங்கியவர்களைக் கண்டு அவர்களுக்கு உணவு, பானம் கழிவறைப் பொருட்கள் அடங்கிய பைகளை விநியோகித்தார்கள்.

