போதைப்பொருள் கடத்தியதற்காக இரண்டு சிங்கப்பூரர்களுக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சீனாவின் குவாங்சூ நகரில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகம் உதவி வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சித்தி அஸ்லினா ஜுனைடி, 35, என்ற மாதுக்கும் முகம்மது யூஸ்ரி முகம்மது யூசோப், 44, என்ற ஆடவருக்கும் இடைவிடாமல் தூதரகம் உதவி வருகிறது. அந்த இரு சிங்கப்பூரர்களுக்கும் மருத்துவ உதவி, சட்ட உதவி கிடைக்க தூதரகம் வழி செய்துள்ளது.
அண்மைய நாட்கள் வரை இருவரும் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள தூதரகம் உதவி வந்துள்ளது.
அஸ்லினா, முகம்மது யூஸ்ரி இரண்டு பேரும் தங்கள் பெட்டிகளுக்குள் இருந்த 28 மாதர் கைப்பைகளில் 11 கிலோ போதைப்பொருளை மறைத்து எடுத்துவந்ததாகக் கூறி சீனாவின் ஷெங்ஷன் நகரில் 2015ல் அவர்களை அதிகாரி கள் கைது செய்ததாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இருவரும் போதைப்பொருள் கடத்திய குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முகம்மது யூஸ்ரிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அநேகமாக அவருக்கு மரண தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அஸ்லினாவின் இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை உறுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் கைதாகி தண்டனை பெற்றுள்ள இருவரும், சிபுசர் ஓன்வூக்கா என்ற ஆடவரின் வலையில் சிக்கி தாங்கள் இந்தக் கதிக்கு ஆளாகி இருப்பதாகவும் தங்கள் பெட்டிகளுக்குள் போதைப்பொருள் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறிவருகிறார்கள்.
சிபுசர் ஓன்வூக்கா என்பவர் யார், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை அதிகாரிகள் தனியாகக் கையாண்டு வருகிறார்கள் என்று நீதிமன்றப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் மனித உரிமை ஆதரவு வழக்கறிஞர் எம். ரவி, இந்த வழக்கில் ஆலோசனை வழங்கி வருகிறார். இவர் இது பற்றி ஃபேஸ்புக்கில் வியாழக்கிழமை கருத்து தெரிவித்தார்.
சீனாவில் வழக்கறிஞரை அமர்த்துவது சிரமமானதாக இருக்கிறது என்றாலும் பொது நல வழக்கறிஞர் ஒருவர் சிங்கப்பூரர்கள் சார்பில் வாதாட முன்வந்து இருப்பதாகத் திரு ரவி குறிப்பிட்டுள்ளார்.

