இசைத் திறனில் சிறந்து விளங்கும் 48 இளம் கலைஞர்கள் இவ்வாண்டின் தேசிய இந்திய இசை போட்டியில் விருதுகள் பெற்றனர்.
1988ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இப்போட்டி முதல் முறையாக இணையம் வழி நடைபெற ஏற்பாடு செய்தது தேசியக் கலை மன்றம்.
சிங்கப்பூரின் பரந்த இந்திய இசை வகைகளைக் கொண்டாடும் நிகழ்வு இது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இப்போட்டிக்கு இம்முறை எட்டு இசைப் பிரிவுகளில் 170 விண்ணப்பங்கள் கிடைத்தன. 14 முதல் 20ஆம் தேதி வரை போட்டியின் படைப்புகள் மெய்நிகர் பாணியில் நடந்தேறின.
கலைஞர்கள் தமது திறன்களை வெளிப்படுத்தும் போட்டியாக மட்டுமில்லாமல் புதிய இசை திறன்களைக் கண்டறியவும் பங்கேற்பாளர்கள் பெயர்பெற்ற அனைத்துலக கலை நீதிபதிகளுக்கு முன் படைக்கும் வாய்ப்பையும் வழங்கும் நோக்கத்துடன் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு இந்தியாவைச் சேர்ந்த ஏழு இசைப் பிரபலங்கள் உள்ளடக்கிய நீதிபதி குழு போட்டி யாளர்களின் படைப்புகளை இணையம் வழி மதிப்பிட்டனர்.
கர்நாடக பாடகர் சுதா ரகுநாதன், கர்நாடக, வயலின் நிபுணர் எம்பர் எஸ்.கண்ணன், கிராமி விருதுகளுக்கு முன்மொழியப்பட்ட புல்லாங்குழல் கலைஞர் ஷஷாங் சுப்பிரமணியம், விருது பெற்ற வீணை கலைஞர், இசை அமைப்பாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெயந்தி குமரேஷ், சிறந்த சமகால மிருதங்க இசைக் கலைஞரான மன்னார்குடி ஈஸ்வரன், சிறந்த இளம் தபேலா கலைஞரான அனுப்ரதா சாட்டர்ஜி, இந்துஸ்தானி பாடகரும் சித்தார் கலைஞருமான ரயீஸ் கான் ஆகியோர் நீதிபதிகளாக இருந்தனர்.
போட்டியில் கர்நாடக பாடல், இந்துஸ்தானி பாடல், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம், சித்தார், தபேலா ஆகிய இசைப் பிரிவுகள் இருந்தன.
ஒவ்வோர் இசைப் பிரிவிலும் 'ஜூனியர்' (12 வயதுக்கும் கீழ்), 'இண்டர்மிடியட்' (18 வயதுக்கும் கீழ்), 'ஓப்பன்' (30 வயதுக்கும் கீழ்) என்று மூன்று வயது பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டனர்.
கர்நாடக பாடலில் 'இண்டர்மிடியட்' பிரிவிலும் இந்துஸ்தானி பாடலில் ஜூனியர் பிரிவிலும் முதல் இடத்தைப் பிடித்தவர் திரு மணிகண்டன் கௌஸ்துப் சந்திர மௌலி, 11.
"இசை என்பது என் மூச்சு போல. இசை என் வாழ்வில் மிகவும் முக்கியமானது. லால்குடி ஜெயராமன், ரவிகிரன், சஞ்சய் சுப்ரமண்யன் போன்ற மாபெரும் கலைஞர்களைப் போல ஒரு நாள் நானும் ஆக விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு நல்ல இசைக் கலைஞராவது என் நோக்கம்," என்றார் கௌஸ்துப்.
இந்திய இசை என்பது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா இனத்தவர்களுக்கும்தான் என்பதைப் பறைசாற்றும் வகையில் சீன இனத்தவரான 15 வயது திரு வூ ஷாவ் குவான், தபேலா இசைக் கருவிக்கான 'இண்டர்மிடியட்' பிரிவில் இரண்டாம் நிலையைப் பிடித்தார். ஒன்பது ஆண்டுகளாக 'நுண்கலைக்களுக்கான கோயிலில்' தபேலா கற்று வருகிறார் இவர்.
"ஒருபோதும் நான் இதை செய்யக்கூடாது. இது எனக்கானது இல்லை என்று நான் சிந்தித்ததே இல்லை. என் தந்தை, குரு, என்று அனைவரும் உறுதுணையாக இருக்கிறார்கள்," என்றார் திரு குவான்.
18 வயது இரட்டை சகோதரிகளான குமாரி ஸ்ருதி குமார், குமாரி ஸ்வாதி குமார் வயலின் இசைக் கருவியைக் கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்திய நுண் கலைக் கழகத்தில் கற்று வருகின்றனர். இண்டர்மிடியட் பிரிவில் ஸ்ருதி இரண்டாம் பரிசையும் ஸ்வாதி மூன்றாம் பரிசையும் பெற்றனர். 12 வயதாக இருக்கும்போது ஸ்ருதி பள்ளியில் ஓடும்போது விழுந்ததில் அவரின் கையில் காயம்பட்டது. ஆறு மாதங்களுக்கு அவரால் வயலின் வாசிக்க முடியாத நிலை அதனால் ஏற்பட்டது. அந்த சம்பவம் தமக்கு வயலின் இசை மீதான நாட்டத்தை அதிகரித்தது என்று குறிப்பிட்டார் ஸ்ருதி.
"கையில் காயம்பட்ட நேரத்தில் என் சகோதரியுடன் வயலின் வகுப்புக்கு சென்று மற்றவர்கள் இசைப் பயிற்சி மேற்கொள்வதைக் கேட்பேன். அந்த நேரத்தில் என்னால் வயலினைப் பயன்படுத்த முடியவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. நான் குணமானவுடன் பயிற்சி செய்து, நிகழ்ச்சி ஒன்றிலும் குறைந்த பயிற்சியுடன் கலந்து கொண்டேன். அந்த அனுபவம் எனக்கு தன்னம்பிக்கையைத்தந்தது," என்று உற்சாகம் பொங்க கூறினார் ஸ்ருதி.
"கடந்த சில ஆண்டுகளாக இசையின் சிறப்பை மேம்படுத்து வதில் தேசிய இந்திய இசைப் போட்டி ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது. சிங்கப்பூர் இந்திய இசையில் ஆர்வமுள்ள இளம் இசைக் கலைஞர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவது, புதிய இசைத் திறன்களைக் கண்டறிவது, இசையின் தரத்தை உயர்த்துவது ஆகிய அம்சங்களில் இசைப் போட்டி உதவியுள்ளது," என்றார் தேசிய இந்திய இசைப் போட்டியின் ஆலோசகர் குழுவின் தலைவர் டாக்டர் உமா ராஜன்.

