புளோக் 505, வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள 'டோமினோ பிட்சா' கிளை உணவகத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று அங்குள்ள ஊழியர் ஒருவரைத் தாக்கி, காயப்படுத்தியதால் 39 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 25ஆம் தேதி பிற்பகல் 3.39 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் தாக்கப்பட்ட அந்த 23 வயது ஊழியர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று போலிசார் தெரிவித்தனர்.
சமூக ஊடகத்தில் இடம்பெற்ற காணொளிகளில் அந்த ஆடவர், ஊழியர் ஒருவரை முகத்தில் குத்திய பிறகு அவரது தலைமுடியைப் பிடித்தவாறு தரையில் அவரை இழுத்துக்கொண்டு சென்றதைக் காண முடிந்தது.
கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்தக் காணொளியில் டிசம்பர் 25, பிற்பகல் 3.50 மணி என்று நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணொளி விளக்கக் குறிப்பில், "டோமினோ உணவு விநியோகிப்பாளர் ஒருவரால் தங்கள் உணவகத்தின் இளம் மேலாளர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் எங்களின் வெஸ்ட் கோஸ்ட் கிளையில் நடந்தது," என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தக் கிளைக்கு நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்று பார்க்கையில், சம்பவத்தில் தாக்கப்பட்ட அந்த மேலாளர் அங்கில்லை என்றும் அதன் தொடர்பில் கருத்துரைக்க அதன் ஊழியர்கள் மறுத்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

