சிங்கப்பூரின் முதலாவது மின்சார மோட்டார் சைக்கிள் நிறுவனமான 'ஸ்கோபியோ எலெக்ட்ரிக்'கின் இணை நிறுவனரான 43 வயது திரு ஜோயல் சாங், அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி, கடந்த ஆண்டில் தனியார் பங்கு முதலீட்டாளரான 39 வயது திரு ஜேம்ஸ் சானுடன் இணைந்து 'ஐயோன் மோபிலிட்டி' எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்.
மோட்டார் சைக்கிளிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் மாசைப் போக்கும் நோக்கில் இந்நிறுவனத்தைத் தொடங்கியதாக திரு சாங் கூறினார்.
"தொடங்கி 14 மாதங்களே ஆனாலும் நாங்கள் அனுபவமிக்க வட்டாரக் குழுவை அமைத்துள்ளோம். 2021 நான்காம் காலாண்டில் ஆயர் ராஜா கிரசெண்டில் அமைந்துள்ள எங்கள் பணிமனையில் நாங்கள் மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளோம்," என்று திரு சாங் கூறினார்.
"எங்கள் 'ஐயோன் 1' ஸ்கூட்டருக்கான விலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இந்தோனீசியாவிலும் சிங்கப்பூரிலும் விற்கப்படும் பிரபலமான 150-155cc பெட்ரோல் மோட்டார் சைக்கிளின் விலையுடன் ஒத்திருக்கும்," என்றும் திரு சாங் சொன்னார்.
மேலும் 'ஐயோன் மோபிலிட்டி' தனது சொந்த மோட்டார் சைக்கிளுக்கான மின்கலன்களை (பேட்டரி) தயாரிக்கவுள்ளது.
அதன் முதல் தொகுதி மின்கலன்கள் 2021 இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு விடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"வெளிப்புற ஆலோசனையாளர்கள் இல்லாமல் சொந்தமான மின்கலன்களை உற்பத்தி செய்யும் முதல் நிறுவனமாக 'ஐயோன் மோபிலிட்டி' திகழும் என்றும் திரு சாங் தெரிவித்தார்.

