- கி.ஜனார்த்தனன்
தேசிய கலைகள் மன்றம் வழங்கிய 'இளங்கலைஞர் விருதை' வென்ற நால்வரில் 33 வயது முழுநேர கர்நாடக இசைக்கலைஞர் சுஷ்மா சோமசேகரும் ஒருவர்.
இருப்பினும், தமக்குக் கிடைத்த இச்சிறப்பு அங்கீகாரத்தைப் பற்றி அதிகம் பேசாமல், கற்றுக்கொண்ட பாடல்களின் இசை, பொருளின் அழகைப் பற்றி எங்களுடன் மெய்
மறந்து பகிர்ந்துகொண்டார் சுஷ்மா. தமிழில் இயற்றப்பட்ட பாடல்களின் மீது தனி விருப்பம் இருப்பதாகக் கூறுகிறார் இவர்.
சிங்கப்பூரில் கல்வி பயின்று பகுதிநேரமாக இசையைக் கற்றுவந்த திருவாட்டி சுஷ்மா கடந்துவந்த பாதை அரிது. டாக்டர் பாக்யா மூர்த்தியுடன் தமது கற்றல் பயணத்தை நான்கு வயதில் தொடங்கிய திருவாட்டி சுஷ்மா, பின்னர் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் 2004ஆம் ஆண்டுவரை பயின்று இசைத் துறையில் பட்டயம் பெற்றார்.
அதன் பிறகு சுஷ்மா, பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வை முடித்த பின்னர் இசை யில் மேல்பயடிப்புக்காக சென்னை சென்றார்.
அங்கு அவர் பிரபல பாடகி நித்யஸ்ரீயின் தாயார் லலிதா சிவகுமார், ஆர் கே ஸ்ரீராம் குமார் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டார். சென்னையில் பன்மொழித்திறன் மிக்க தமது குரு ஸ்ரீராம் குமாரால் சங்கீதப் படைப்புகளின் ஆழத்தை மேலும் ரசிக்க இயன்றதாக திருவாட்டி சுஷ்மா கூறினார்.
"பாடல் வரிகளின் பொருளை அவர் விளக்கும்போது அதிலேயே அவர் மெய்மறந்து கண்ணீர் சிந்துவார்," என்று பூரிப்புடன் கூறினார்.
சென்னையில் ஆயிரமாயிரம் பேர் இசையை வாழையடி வாழையாகக் கற்பதைக் காணும்போது அங்கு என்னதான் கற்றுக்கொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் வெறி தமக்குள் எழுந்ததாக இந்த இளையர் கூறினார். கணக்காய்வாளரான தமது தந்தையைப் போல் சுஷ்மா, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணக்காய்வுத் துறையில் சேர ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார். ஒரு நிறுவனத்தில் ஆறு மாதங்கள் வேலை செய்த பிறகு சங்கீதத்திலேயே முழுமூச்சாக ஈடுபடவேண்டும் என்ற முடிவுடன் அங்கிருந்து விலகினார்.
பின் 2009ஆம் ஆண்டு சென்னைக்கு மீண்டும் சென்று அங்கு ஐந்து ஆண்டுகளாகத் தங்கி சங்கீத சபைகளில் இசை நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தார்.
"தொடக்கத்தில் முழுநேரக் கலைஞராக இருந்தது சிரமமாக இருந்ததால் சென்னையிலுள்ள நிறுவனம் ஒன்றில் நான் கணக்காய்வாளராகப் பணியாற்றினேன்," என்று இவர் கூறுகிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் இங்கும் அங்குமாக தங்குவதாகத் தெரி வித்தார்.
இவர் 2009ல் ஐரோப்பாவிலும் இலங்கை போருக்குப் பிறகு 2010ல் யாழ்ப்பாணத்திலும் 2011ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். பிறகு, 2013ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிய புரிதலை மக்கள், குறிப்பாக இளையர்கள் மத்தியில் அதிகப்படுத்த சொந்தமாக மேடை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்.
"எனது திறன்களின் மூலம் சிங்கப்பூருக்கு ஏதேனும் செய்யவேண்டும் என எனக்கு அறிவுரை வழங்கபட்டிருந்தது," என்கிறார் இவர்.
தமது தாயாருக்கும் இரண்டு பாட்டிகளுக்கும் பாடத் தெரியும் என குறிப்பிட்ட சுஷ்மா, தமது தாயாரின் அம்மாவிடம் திருப்புகழ் பாடல்களை மேலும் ஆழமாகக் கற்கவில்லை என்ற வருத்தம் தம்முள் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
நல்ல கலைஞர்கள் இயற்கை எய்துவதற்கு முன் அவர்களது திறன்களைப் பற்றி வருங்கால சந்ததியினருக்குத் தெரியும் வகையில் ஆவணப்படுத்துவது முக்கியம் எனக் கூறுகிறார் சுஷ்மா. எனவே, 1940கள் முதல் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் படைப்புகளை மின்னிலக்க வடிவில் ஆவணப்படுத்தும் திட்டத்தை இவர் 2017 முதல் 2018 வரை வழிநடத்தினார்.
"சமுதாயம் பயன்பெறும் வகையில் நானும் என் சக கலைஞர்களும் ஏதேனும் விட்டுச்செல்லவேண்டும் என்ற விருப்பத்தால் இதில் ஈடுபட்டேன்," என்று இவர் தெரிவிக்கிறார்.
"கலைத்துறையில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், நல்ல கலையார்வம் கொண்டுள்ளோருடன் நட்புவட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கற்பிக்கும் குருவிடம் வெளிப்படையாக பேசி அவர்கள் கூறும் கருத்துகளுக்குச் செவிசாய்க்கவேண்டும்," என்று சுஷ்மா தெரிவித்தார்.
"வாழ்க்கையில் என்ன நடந்தாலும், எதை நீங்கள் தொடர்ந்து செய்ய விரும்புகிறீர்களோ அதுவே உங்களது ஆர்வம் என உணர்ந்து செயல்படுங்கள்," என்றார்.

