உணவங்காடி நிலையத்திலுள்ள இருக்கைக் குறிகள், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரம்பிற்கு தகுந்தபடி மாற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மூன்றாவது கட்டத் தளர்வு நடவடிக்கையான இன்று முதல் எட்டு பேர் வரை ஒன்றாக உட்கார்ந்து அமரலாம்.
எட்டு அல்லது குறைவான இருக்கைகளைக் கொண்ட மேசைகளின் இருக்கைகளின் குறிகள் இருக்காது. எட்டுக்கும் அதிகமான இருக்கைகள் இருந்தால் அந்த இருக்கைகளில் சிலவற்றில் குறிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய மாற்றங்களுக்குப் பிறகும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணும் மேசைகளுக்கு இடையே 1 மீட்டருக்கு குறைவான இடைவெளி இருந்தாலும் எட்டு அல்லது குறைவான இருக்கைகளைக் கொண்ட மேசைகளின் இருக்கைகளிலும் குறிகள் இருக்கலாம்.
பாதுகாப்பு நிர்வாக விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு இடைவெளி தூதுவர்கள் உணவங்காடி நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றுவர் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
இவ்வாண்டு ஏப்ரல் 3ஆம் தேதி நோய்ப்பரவல் முறியடிப்புத் திட்டம் தொடங்கி கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆன பிறகு சிங்கப்பூர் மூன்றாவது கட்ட தளர்வு நடவடிக்கையை இன்று செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

