மூன்றாம் கட்டத் தளர்வுகள்: வாடிக்கையாளர்கள் வரவேற்பு

- இர்‌‌‌ஷாத் முஹம்மது

கொவிட்-19 கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் பாதுகாப்பான மறுதொடக்கத்தின் மூன்றாம் கட்டம் இன்று நடப்புக்கு வந்தது. அதற்கு அறிவிக்கப்பட்டிருந்த பல தளர்வுகளில் ஒன்று, உணவகங்களில் எட்டுப் பேர் வரை சேர்ந்து உணவருந்தலாம் என்பது. இந்தத் தளர்வுகள் நடப்புக்கு வந்தாலும் பல உணவகங்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் நேற்று மக்கள் சிறிய எண்ணிக்கையிலேயே குழுவாக அமர்ந்து உணவருந்தினர்.

தேக்கா உணவு நிலையத்தில் மேசைகளிலும் இருக்கைகளிலும் முன்பு ஒட்டப்பட்டிருந்த வில்லைகள் அகற்றப்பட்டன. ஒரு மேசையில் ஐந்து பேர் வரையில் மட்டுமே உட்காரலாம் என்ற நிலை மாறுவதால் அந்த வில்லைகள் அகற்றப்பட்டன.

“நாங்கள் நால்வரும் ஒரே குழுவாக வந்து தினமும் காப்பி குடிப்போம். வாரத்திற்கு இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் ஏழு பேர் வரையில் வருவோம். முன்னர் இரண்டு மேசைகளில் உட்கார வேண்டும். இனி ஒரே மேசையில் நாங்கள் உட்கார்ந்து கலந்துரையாடலாம்,” என்று கூறினார் லிட்டில் இந்தியாவில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் கருணாகரன் முருகையா.

ஓய்வு நேரங்களில் தேக்கா நிலையத்திற்கு சக ஊழியர்களுடன் மாலை நேரத்தில் அவர் வருவது வழக்கமான ஒன்று. மார்ச் மாதம் குடும்பத்தில் நடக்கவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய லிட்டில் இந்தியா வந்த குலாம் நசீர் குடும்பத்தினருக்குப் பெருமிதம் தரும் அறிவிப்பாக இது அமைந்தது. ஒரே குழுவாக ஏழு பேர் வந்திருந்ததால் அவர்கள் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சுவைக்கத் திட்டமிட்டனர்.

மேலும் தளர்வுகள் நடப்புக்கு வந்தாலும் பெரிய அளவில் மக்கள் கூடுவதற்கு வரவில்லை என்றார் உணவங்காடிக் கடை நடத்தும் திரு முருகேசன்.

“எப்போதும்போலவேதான் இருந்தது. ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. வாரத்தின் தொடக்கமாக இருப்பது காரணமாக இருக்கலாம். வரும் வாரயிறுதியில் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பெரிய குழுக்களாக வருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார் அவர்.

சிகை அலங்காரச் சேவையை நாடி லிட்டில் இந்தியாவிற்கு வந்த 38 வயது மாதவி கிரு‌ஷ்ணமூர்த்தி, சிற்றுண்டி சாப்பிட தோழியுடன் தேக்காவுக்கு வந்தார். “மூன்றாம் கட்டத் தளர்வுகள் வரவேற்கப்பட்டாலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் பெரிய குழுவாக வருவேன். அறிவிப்பு வந்துவிட்டது என்பதால் அதைக் கொண்டாடவேண்டும் என்பதில்லை. அனைவரும் இதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று,” என்றார் அவர்.

எதிர்வரும் புத்தாண்டு நாளிலும் அதை ஒட்டி வரும் வாரயிறுதியிலும் பெரிய குழுக்களாக மக்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் உணவருந்த சிங்கப்பூரின் பல உணவகங்களுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், எட்டு இருக்கைகள் அல்லது அதற்குக் குறைவாக உள்ள மேசைகளில் இனி வில்லைகள் ஒட்டப்படாது என்றும் எட்டுக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தால் சில இருக்கைகளுக்கு வில்லைகள் ஒட்டப்படும் என்றும் தெரிவித்தது.

“மூன்றாம் கட்டத் தளர்வுகளின்போது எட்டுப் பேர் வரை ஒன்றாக உணவருந்த அனுமதி வழங்கப்படுவதால் உணவங்காடி நிலையங்களில் உள்ள இருக்கைகளிலும் மேசைகளிலும் மாற்றம் செய்யப்பட்ட வில்லைகள் ஒட்டப்படும். எளிமையையும் நீக்குப்போக்கான மனநிலையையும் மனதில் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றும் வாரியம் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் தூர இடைவெளியைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஒரு மேசைக்கும் இன்னொரு மேசைக்கும் இடையில் அந்தக் குறைந்தபட்ச இடைவெளி இல்லை என்றால் சில இருக்கைகளில் அமர அனுமதி இருக்காது என்றும் வாரியம் விவரித்தது. பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிசெய்ய பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் தொடர்ந்து உணவங்காடி நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அது தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!