பெண்களின் மானத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட முன்னாள் மனநலக் கழக ஊழியருக்கு நான்கு ஆண்டு, ஒன்பது மாதங்கள், ஒரு வார சிறைத் தண்டனையும், பத்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தைக் காக்க அவரது பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று மனநலக் கழகத்தில் அந்த ஆடவர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அறை ஒன்றில் படுக்கையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணை அவர் கண்டார். அந்தப் பெண்ணை அவர் மானபங்கம் செய்தது மட்டுமல்லாது, அந்தச் செயலை அவர் காணொளி எடுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று 29 வயது பெண் நோயாளியையும் அவர் மானபங்கம் செய்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனநலக் கழகத்தில் சிகிச்சை பெறும் பெண் நோயாளிகளை மட்டு மின்றி, அங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்களை நோக்கியும் அவர் பார்வை சென்றது. பெண் ஊழியர்கள் ஆடை மாற்றுவதை அவர் காணொளி எடுத்தார்.
ஒருமுறை வார்டுகளில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண் ஊழியரின் பாவாடைக்குள் அந்த ஆடவர் காணொளி எடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களையும் அந்த ஆடவர் விட்டுவைக்கவில்லை. கர்ப்பிணி பெண்களைக் குறிவைத்து கெரொசல் இணையத் தளத்தில் அவர் பொய் விளம்பரம் ஒன்றைச் செய்தார்.
மனநலக் கழகம் கர்ப்பணிகள் தொடர்பான படத்தொகுப்பு ஒன்றைச் செய்வதாக அதில் கூறிய அந்த ஆடவர், அதில் பங்கெடுக்கும் ஒவ்வொரு கர்ப்பணி பெண்ணுக்கும் தலா $10 வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
விளம்பரத்தைப் பார்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சைனீஸ் கார்டன்ஸ் அருகில் படமெடுத்துக்கொள்ள 26 வயது பெண் ஒருவர் இணங்கினார். அந்தப் பெண் கவனிக்காதபோது அவரது பாவாடைக்குள் அந்த ஆடவர் காணொளிகளை எடுத்தார்.இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தமது கைபேசியைப் பயன்படுத்தி இரண்டு பெண் நோயாளிகள் குளிப்பதை அந்த ஆடவர் காணொளி எடுத்தார்.
அவரது குற்றங்கள் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.அன்று காலை 7.40 மணி அளவில் கென்பரா எம்ஆர்டி நிலையத்தில் உள்ள மின்படிகளில் ஏறிக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் அந்த ஆடவர் சிக்கினார். தமது காலில் ஏதோ படுவது போன்று உணர்ந்த அப்பெண் திரும்பி பார்த்தபோது தமது இடது கையில் கைபேசியை வைத்துக்கொண்டு அந்த ஆடவர் தமக்குப் பின்னால் நிற்பதைக் கண்டார்.
இதுகுறித்து போலிசில் அப்பெண் புகார் செய்தார். இரண்டு நாட்கள் கழித்து மனநலக் கழகத்தில் போலிசார் அந்த ஆடவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த இரண்டு கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தக் கைபேசிகளைச் சோதனையிட்ட போலிசார் அதிலிருந்த காணொளிகளைக் கண்டெடுத்தனர். தமது கட்சிக்காரருக்குப் பெண்களின் அந்தரங்கங்களை மறைந்திருந்து பார்க்கும் ஒருவகை நோய் இருப்பதாக இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆடவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறினர். ஆனால் மனநலக் கழகத்தில் பணிபுரிபவர் என்ற வகையில் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை அந்த ஆடவர் தவறான முறையில் பயன்படுத்தி பெண்களின் மானத்துக்குப் பங்கம் விளைவித்ததாகவும் இது மற்ற சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் நற்பெயரைப் பாதிக்கும் என்று அரசாங்க வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் தெரிவித்தார்.

