மசேநியில் தொகை நிரப்புவதற்கான 3 மாபெரும் காரணங்கள்

3 mins read
43e31548-33db-4706-8aa5-9019505d7d88
-

ஓய்வுக்காலம் உட்பட மற்ற பல பயன்களைப் பெறுவதற்கு மசேநியில் தொகை நிரப்புங்கள். அதை இப்போதே செய்வதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இதோ.

1. கவர்ச்சியான வட்டி விகிதங்கள்

வங்கியில் பணத்தை வைத்திருப்பதைவிட, மசேநி சிறப்புக் கணக்கில் (55 வயதுக்கு கீழ்பட்டவர்) அல்லது ஓய்வுக்காலக் கணக்கில் (55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்) பணம் நிரப்பும்போது கூடுதலான வட்டியைப் பெறலாம்.

நீங்கள் 55 வயதுக்கு கீழ்பட்டவர் என்றால், ஒருங்கிணைந்த மசேநி சேமிப்பில் இருக்கும் முதல் $60,000க்கு 5 விழுக்காடு வரை வட்டி பெறமுடியும். நீங்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், சேமிப்பில் இருக்கும் முதல் $30,000க்கு 6 விழுக்காடு வரை வட்டியும் அடுத்த $30,000க்கு 5 விழுக்காடு வரை வட்டியும் பெறலாம்.

கூட்டு வட்டியின் பயனால் ஆண்டுக்கு ஆண்டு உங்கள் மசேநி சேமிப்பு அதிவேகமாக உயரும். பணம் நிரப்புவதை விரைவில் தொடங்கினால் காலப்போக்கில் நிதி பெருகி உங்கள் நன்மைக்காக வளரும்.

தனிப்பட்ட உண்டியலில் மாதம் $100 என்று 15 ஆண்டுங்கள் சேமித்தால், உங்களுக்கு $18,000 கிடைக்கும். கூட்டு வட்டியுடன், ஒவ்வொரு மாதமும் $100 உங்கள் சிறப்பு அல்லது ஓய்வுக்காலக் கணக்கில் 15 ஆண்டுளுக்கு நிரப்பினால், உங்களுக்கு $24,000க்கும் மேல் கிடைக்கும். மேலும் 15 ஆண்டுகளுக்கு நிரப்பினால் அந்தத் தொகை $68,000யையும் தாண்டி வளரும்.

2. மசேநி சேமிப்புகள் பாதுகாப்பானவை

மசேநி சேமிப்பில் உள்ள பணம் அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்றது. நிதிச் சந்தையின் நிலவரத்தில் என்ன நடந்தாலும் சரி, உங்கள் மசேநி சேமிப்புகள் திருப்பி வழங்கப்படும் என்பது உறுதி.

அதுபோக, உத்தரவாதத்துடன் உறுதிசெய்யப்பட்ட மசேநி அடிப்படை வட்டி விகிதங்கள், சந்தைகள் வலு இழக்கும்போது ஏற்படும் குறைவான வட்டி அபாயத்திலிருந்து உறுப்பினர்களைப் பாதுகாக்கிறது. அனைத்து மசேநி சேமிப்புகளும் சட்டப்படி ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 2.5 விழுக்காடு வட்டியைப் பெறுகின்றன. அதே சமயம் சிறப்பு,

மெடிசேவ் (MediSave) மற்றும் ஓய்வுக்காலக் கணக்குகளில் இருக்கும் தொகைகளுக்கு 4 விழுக்காடு தற்போதைய அடிப்படை வட்டியாக வழங்கப்படுகிறது. ஆகவே பங்குகளிலும் இதர நிதி முதலீட்டுக் கருவிகளிலும் மூலதனம் செய்வதைவிட, மசேநியில் நிதி நிரப்புவது பாதுகாப்பான மாற்று வழியாக அமைகிறது.

3. வருமான வரியில் சேமிப்பு

அன்புக்குரியவர்கள் உட்பட உங்களின் மசேநி கணக்குகளில் ரொக்க பணம் நிரப்புவதன்வழி $14,000 வரை வருடாந்தர வருமான வரி விலக்காக நீங்கள் பெறலாம்.

சொந்த மசேநி கணக்கில் நீங்கள் செய்யும் ரொக்க தொகை நிரப்புதல்களுக்கு நிகராக அதே தொகை அளவு, ஆண்டுக்கு $7,000 வரை, வருமான வரி விலக்காக பெறலாம்.

துணைவர், உடன்பிறப்புகள், பெற்றோர்கள், துணைவரின் பெற்றோர்கள், தாத்தா பாட்டி, துணைவரின் தாத்தா பாட்டி, ஆகியோரின் மசேநி கணக்குகளில் நீங்கள் செய்யும் ரொக்க நிரப்புகளுக்கும் நிகராக அதே தொகை அளவு, ஆண்டுக்கு $7,000 வரை, வருமான வரி விலக்காக பெறலாம்.

அன்புக்குரியவர்களின் மற்றும் உங்களின் மசேநி கணக்குகளில் தொகை நிரப்புதல், உங்கள் பணத்தைப் பெருக வைப்பதற்கு ஓர் எளிய முறையாகும். சேமிப்புகள் சிறந்த வகையில் பயனளிக்கும் வகையில் செயல்பட, ஓய்வுக்காலத்திற்குப் போதுமான அளவு நிதி சேமிப்பு இருக்க, ஓய்வுக்காலத்தில் நிம்மதியான மனநிலையைப் பெற, வருமான வரிக் கட்டணத்தில் விலக்குகளைப் பெற, ஒரே நேரத்தில் அனைத்தையும் அனுபவிக்க இந்த செயல்முறை வழிவகுக்கும்.

ஓய்வுக்காலத் தொகை நிரப்பும் திட்டம் (Retirement Sum Topping-Up Scheme) பற்றிய மேல் விவரங்களுக்கு cpf.gov.sg/rstu என்ற இணையத்தளத்தை நாடவும்.

[1] நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது.

[2] இவை மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களை விளக்க. உங்களின் சிறப்பு அல்லது ஓய்வுக்காலக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு தரப்படும் அடிப்படை வட்டியான 4% வைத்து கணக்கிடப்பட்டது.