தேவைக்கேற்ப கட்டப்படும் திட்டத்தின் 'செயிண்ட் ஜார்ஜஸ் டவர்ஸ்' பேட்டையின் மூன்று புளோக்குகளின் வடிவமைப்பு, 'லூக் ஆர்க்கிடெக்ட்ஸ்' நிறுவனத்துக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) தலைசிறந்த வடிவமைப்பு விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் வீவக, வடிவமைப்பு, கட்டுமானம், பொறியியல் உன்னதம் ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு சாதனை அளவாக 35 வெற்றியாளர்களை அறிவித்தது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு 2008ஆம் ஆண்டில் தொடங்கியது.
முதிர்ச்சியடைந்த காலாங்-வாம்போ வட்டாரத்தில் கட்டுப்பட்டுள்ள 'செயிண்ட் ஜார்ஜஸ் டவர்ஸ்' புளோக்குகள், குறைவான மாடிகள் கொண்ட கட்டடங்களுக்கு நடுவே உயர்ந்து, நிமிர்ந்து நிற்கின்றன.
24 மாடிகள் கொண்ட அந்தப் புளோக்குகள் ஒவ்வொன்றின் உச்சியிலும் மொட்டை மாடி இருக்கும். அங்குள்ள உடற்பயிற்சி சாதனங்கள், இருக்கைகளைக் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தலாம்.
மேலும் அங்கிருந்து குடியிருப்பாளர்கள் நகரம் மற்றும் வாம்போ ஆற்றின் எழிலையும் கண்டு களிக்கலாம். மற்ற விவக புளோக்குகளைப் போலல்லாமல், இந்த மூன்று புளோக்குகளின் சன்னல்கள், ஒவ்வோர் ஆறு மாடிக்கும் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'செயிண்ட் ஜார்ஜஸ் டவர்ஸ்'சில் ஸ்டூடியோ வீடுகள், மூவறை, நான்கு அறை வீடுகள் என மொத்தம் 738 வீடுகள் இருக்கும். 151 ஸ்டூடியோ வீடுகளில் பாதி, அதே நகரத்தில் பெரிய வீட்டிலிருந்து சிறிய வீட்டுக்கு மாற விரும்பும் அல்லது முன்னைய வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் உள்ள வீட்டுக்கு மாற விரும்பும் அல்லது திருமணமான பிள்ளைகளின் வீட்டுக்கு அருகே வசிக்க விரும்பும் மூத்தோருக்காக ஒதுக்கப்படும்.
துடிப்பாக மூப்படைத்தலை ஊக்குவிக்க, அந்த வீடமைப்புத் திட்டத்தில் முதியோர் நடவடிக்கை நிலையமும் சமூக அளவில் ஒன்றுகூடும் கூரையுடன் கூடிய இடங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
பிடாடாரி பேட்டையில், 'ஏடிடிபி ஆர்க்கிடெக்ட்ஸ்' வடிவமைத்த 'அல்காஃப் விஸ்தா', 'எஸ்க்யூ
எஃப்டி ஆர்க்கிடெக்ட்ஸ்' வடிவமைத்த மேம்படுத்தப்பட்ட ஹவ்காங் நகர மையம், தெம்பனிஸ் கிரீன் வியூ, மெடோவ் ஸ்பிரிங்@ஈசூன் பிடிஓ திட்டங்கள் போன்றவை விருது பெற்ற திட்டங்களில் சில.
"இந்த ஆண்டு அதிக அளவில் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது, நமது தொழில்துறை பங்காளிகள் தங்கள் உயர்வான தரநிலைகளைக் கொண்டு வாழும் சுற்றுச்சூழலை உருவாக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிறது," என்றார் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் சியோங் கூன் ஹீயன்.

